சென்னையில் அதிர்ச்சி: ரகசிய கேமரா பொருத்தி நோட்டமிட்டு வந்த பெண்கள் விடுதி உரிமையாளர் கைது
சென்னை ஆதம்பாக்கத்தில், பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்களை பொருத்தி நோட்டமிட்டு வந்த விடுதி உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஆதம்பாக்கம் தில்லை நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திருச்சியை சேர்ந்த சஞ்சீவ் என்பவர் பெண்கள் தங்கும் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். இவர் சமூக வலைத்தளங்களிலும் விளம்பரம் கொடுத்ததால் ஆதம்பாக்கம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள பிரபல ஐ.டி நிறுவனங்களில் வேலை செய்து வரும் பல பெண்கள் இந்த விடுதியில் தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக சஞ்சீவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்துள்ளது. எப்போதும் வராத சஞ்சீவ் கடந்த சில மாதங்களாக அடிக்கடி விடுதிக்கு வந்து சென்றுள்ளார். அவரின் செயல்களை கண்டு சற்று குழப்பம் அடைந்த விடுதியில் தங்கியிருந்த பெண்கள் தங்களது செல்போன் மூலம் சஞ்சீவ் எதுவும் தவறான செயலில் ஈடுபடுகிறாரா என நோட்டமிட துவங்கினர்.
அப்படி தங்களது செல்போன் செயலி ஒன்றின் மூலம் ஆராய்ந்ததில் அதிர்ச்சி தரும் விதமாக குளியலறை, படுக்கை அறை போன்ற இடங்களில் சிறிய அளவு ரகசிய கேமராக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விடுதியில் தங்கியிருந்த பெண்கள் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணை செய்ய விடுதிக்கு சென்ற போலீசார் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கேமராக்கள், 16 மொபைல் போன்கள், போலி ஆதார் அட்டைகள், வாக்காளர் அட்டைகள், முகவரி சான்றுகள் என பொய்யான பெயரில் தயாரித்து இருந்த பல ஆவணங்களை கைப்பற்றினர்.
வழக்கு பதிவு செய்த போலீசார் சஞ்சீவை கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதாகவும் 2011-ல் கைதாகி சிறை சென்றுள்ளார் என்பதும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.