தலித்துகள் தொடர்பாக கருத்து... வைகோ மீது விடுதலை சிறுத்தைகள் கடும் பாய்ச்சல்!
தலித்துகள் தம் வீட்டில் வேலை பார்க்கிறார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியிருப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலர் வன்னி அரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வன்னி அரசு எழுதியுள்ளதாவது:
கடந்த இரு நாட்களாக சரியான தூக்கமில்லை. நான் பெரிதும் நேசிக்க கூடிய தலைவர் அவர். அவர் இப்படி பேசியிருக்கக்கூடாது என்று மனம் வேதனை கொள்கிறது.
அந்த தலைவர் அண்ணன் வைகோ அவர்கள் தான். என்னுடைய தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களை எப்படி மதிக்கிறேனோ அப்படித்தான், திரு.வைகோ அவர்கள் மீதான மதிப்பீடும்.
நான் மட்டுமல்ல சிறுத்தைகளில் பெரும்பான்மையோர் அப்படித்தான். அந்தளவுக்கு அண்ணன் வைகோ அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால் கடந்த இரு நாட்களுக்கு முன்பு புதிய தலைமுறை தொலைக்காட்சியில், அதன் ஆசிரியர் திரு.கார்த்திகைச்செல்வன் அவர்களின் நேர்காணலை பார்த்தேன்.
திராவிட இயக்கம் தலித்துகளுக்கான அதிகாரப்பகிர்வை சரியாக தந்துள்ளதா? என்னும் ஞாயமான கேள்வியை முன்வைத்தார். அதற்கு மிக சிறப்பாக, பொறுப்பாக நிறைய பதில் அளித்திருக்கலாம். அதற்கான காரணங்கள் நிறைய இருக்கின்றன.
ஆனால், திரு. வைகோ அவர்கள் அதற்கு பதில் அளிக்காமல், “தலித்துகளுக்கு எதிராக என்னை காட்ட முயற்சி செய்கிறீர்களா? எங்கள் வீட்டில் வேலை பார்க்கிறவர்கள் தலித்துகள் தான்” என்று சொல்லுகிறார்.
இந்த உளவியல் ஒரு ஆதிக்க உளவியலாக பார்க்கிறோம். பண்ணை அடிமை உளவியலாக, நிலப்பிரபுத்துவ உளவியலாகத்தான் பார்க்கிறோம். தலித்துகள் அதிகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினாலே அதற்கு பதில் சொல்லக்கூட மறுப்பது எந்தவிதமான பார்வை? பதற்றமடைவது , கோபமடைவது எதைக்காட்டுகிறது?
தமிழக அரசியலில் நீண்டகால அனுபவம் உள்ளவர் அண்ணன் வைகோ அவர்கள். சமூக நீதிக்கோட்பாடு, பகுத்தறிவு, தந்தை பெரியார் என்று பயணப்பட்டுக்கொண்டிருப்பவர். சமூக மாற்றத்தை விரும்புபவர் தான். தலித்துகள் விடுதலை குறித்த அக்கறை உள்ளவர் தான். ஆனால், எங்கள் வீட்டில் தலித்துகள் வேலை பார்க்கிறார்கள் என்று சொல்லுவதற்கும் அதிகாரப்பகிர்வுக்கும் ஏதாவது ‘சம்மந்தம்’ இருக்கிறதா?
பார்பணர்களிடம் இருந்த அதிகாரம், இடை நிலை சாதிகளுக்கு வந்ததை போல தலித்துகளுக்கு வந்ததா? என்ற கேள்வி திரு.கார்த்திகைச்செல்வன் அவர்களிடமிருந்து மட்டுமல்ல, மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரிடத்திலிருந்தும் பீறிடும் கேள்விகள்.
அந்த நடப்பு யதார்த்தை புரிந்து கொண்டு தான் பயணப்பட வேண்டிய தேவை இருக்கிறது. அதிகாரப்பகிர்வு கடைநிலை மக்களுக்கும் கிடைக்கும் வரை இன்னும் களமாட வேண்டிய தேவையிருக்கிறது .
இடைநிலை சாதிகளிடம் ஆட்கொண்டுள்ள சனாதன - இந்துத்துவ சாதிய சிந்தனைகளை களைந்து, சமத்துவத்துக்கான சிந்தனைகளை பரப்பவேண்டிய பணிகளையும் செய்யவேண்டிய தேவை இருக்கிறது. அந்த வகையில், கடைசி மனிதனுக்கான சனநாயகத்துக்காகவும் எளிய மக்களுக்கான அதிகாரத்துக்காகவும் களமாட வேண்டிய தேவையிருக்கிறது.
அதுவரை ஊடகங்கள் மட்டுமல்ல, எல்லோருமே கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். கோபமோ பதற்றமோ அடைந்தால் சந்தேகம் தான் கூடுதலாக எழும்!
இவ்வாறு வன்னி அரசு பதிவிட்டுள்ளார்.