புது செயலியில் குளறுபடி: பழைய செயலிக்கு திரும்பியது ஹெச்டிஎஃப்சி வங்கி
ஹெச்டிஎஃப்சி வங்கி கடந்த வாரம் புது செயலியை வெளியிட்டது. வங்கியின் பல வாடிக்கையாளர்கள் அதை பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டது. ஆகவே, டிசம்பர் 4ம் தேதி மாலை 5 மணி முதல் பழைய செயலியை பயன்படுத்திக் கொள்ளுமாறு அவ்வங்கி தன் வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு ஏறக்குறைய 4 கோடியே 30 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களுள் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் வங்கியின் புதிய செயலியை (Mobile App) பயன்படுத்த இயலவில்லை என்று தெரிவித்திருந்தனர். புது செயலியை ஸ்மார்ட்போன்களில் நிறுவியதும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது இயங்கவில்லை. பழைய செயலியை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் முயன்றபோது, அதுவும் இயங்காத நிலை ஏற்பட்டது.
செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாடிக்கையாளர்களுக்கு நேர்ந்த இடையூறுகளுக்கு வருத்தம் தெரிவித்துள்ள ஹெச்டிஎஃப்சி வங்கி, பழைய செயலியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. புது செயலியை நிறுவாமல் பழையை செயலியை வைத்திருப்பவர்கள் தொடர்ந்து அதையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், இணைய வங்கி சேவை (Net Banking), தொலைபேசி வங்கி சேவை (Phone Banking) மற்றும் மிஸ்டு கால் சேவை, பேஸ்அப் (PayZapp) ஆகிய வசதிகள் எப்போதும்போல் கிடைக்கும் என்றும் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு மட்டுமே என்றும் வாடிக்கையாளர்களின் தரவுகள், தகவல்கள் தங்களிடம் பாதுகாப்பாக உள்ளதாகவும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.