ஒன்பிளஸ் நிறுவனம் ஹைதராபாத்தில் ஆராய்ச்சி மையம் அமைக்கிறது
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ், இந்தியாவில் ஹைதராபாத் நகரத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை (research and development) அமைக்க இருக்கிறது.
ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்னும் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் என்னும் இயந்திர வழிக் கற்றல் ஆகியவற்றை பயன்படுத்தி இந்திய பயனர்களை மையமாக கொண்ட புது கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் பணியில் புதிதாக அமைய இருக்கும் மையம் ஈடுபடும். மூன்று ஆண்டு காலத்தில் உலக அளவில் முக்கியமான மையமாக இது விளங்கும் என்றும் ஒன்பிளஸ் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான பீட் லா தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தின் வளரும் சந்தை நகரங்களில் ஹைதராபாத் முக்கிய பங்கு வகிப்பதையும், தேவையான தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் நிறுவனத்திற்கு ஏற்ற பொருளாதார சூழல் நிலவுவதையும் கருத்தில் கொண்டு ஹைதராபாத்தை ஒன்பிளஸ் நிறுவனம் தேர்வு செய்துள்ளது.
'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு ஏற்ப நீண்டகாலம் இந்தியாவோடு இணைந்து செயல்பட தங்களை அர்ப்பணித்துள்ளதாகவும், புதிதாக படித்து வரும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க முன்னுரிமை தர இருப்பதாகவும் தெரிவித்துள்ள ஒன்பிளஸ் நிறுவனம், இந்த ஆண்டு டெல்லி மற்றும் மும்பை ஐஐடிகளில் வளாக நேர்முகத்தேர்வினை நடத்த இருப்பதாகவும் கூறியுள்ளது.