தி.க. பொருளாளர் பிறைநுதல் செல்வி காலமானார்-ஸ்டாலின், வைகோ இரங்கல்

திராவிடர் கழகத்தின் பொருளாளர் டாக்டர் பிறைநுதல்செல்வி விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானார்.

தி.க. துணை பொதுச்செயலாளராக இருந்தவர் டாக்டர் பிறைநுதல் செல்வி. திராவிடர் கழக பொருளாளராக இருந்த வழக்கறிஞர் கோ.சாமிதுரை 2013-ல் காலமானார்.

அவருக்குப் பதிலாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற அந்த இயக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் டாக்டர் பிறைநுதல் செல்வி, பொருளாளராகத் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டார்.

உதகையில் மருத்துவத்துறையில் துணை இயக்குநராகப் பதவி வகித்து விருப்ப ஓய்வு பெற்றவர். குன்னூரில் சாலை விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி டாக்டர் பிறைநுதல் செல்வி இன்று காலமானார்.

ஸ்டாலின் இரங்கல்

பிறைநுதல் செல்வி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:

திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல்செல்வி விபத்தில் மரணமடைந்தார் என்ற அதிர்ச்சி செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைகிறேன். தந்தை பெரியாரின் பாலின சமத்துவத்தின் அடையாளமாகவும் பெண் இனத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையிலும்  தாய்க்கழகத்தின் பொருளாளர் பொறுப்பினை ஏற்று, திறம்பட செயல்பட்டு, பல்வேறு போராட்டக்களங்களில் உறுதியாக நின்ற பிறைநுதல்செல்வி இறப்பு திராவிட இயக்கங்கள் அனைத்திற்கும் பேரிழப்பாகும்.

 அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், பிறைநுதல்செல்வி குடும்பத்தாருக்கும், திராவிடர் கழகத் தலைவர் வீர்மணிக்கும் பொருளாளரை இழந்துள்ள திராவிடர் கழக நிர்வாகிகளுக்கும் கொள்கை வழி உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல்:

திராவிடர் கழகத்தின் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி இன்று காலையில் சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி அறிந்து துடிதுடித்துப் போனேன்.

டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்கள் பிஎஸ்சி, எம்பிபிஎஸ், டிஜிஓ ஆகிய பட்டங்களைப் பெற்று உதகை அரசினர் மருத்துவமனையில் தலைமை மருத்துவராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு திராவிடர் கழகத்தில் முழுநேரப் பணியாளராக பணியாற்றிய பெருமைக்குரியவர் ஆவார்.

அவரது வாழ்க்கைத் துணைவர் டாக்டர் இரா.கௌதமன் ஒரு மருத்துவர் ஆவார். அவரது மகனும் மருத்துவர், மகளும் பொறியாளர் என்பது மட்டுமல்ல இவர்கள் அனைவருமே சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்ட லட்சியக் குடும்பத்தினர்கள் ஆவார்கள்.

திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளராக பணியாற்றிய டாக்டர் பிறைநுதல் செல்வி 26.11.2013 அன்று நடைபெற்ற திராவிடர் கழக தலைமை செயற்குழுக் கூட்டத்தில் கழகத்தின் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மிகச்சிறந்த மருத்துவராகவும், சொற்பொழி வாளராகவும், கழகத்தின் திறமை மிக்க நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்த சிறப்புமிக்க டாக்டர் பிறைநுதல் செல்வி திடீர் மறைவு திராவிடர் கழகத்திற்கு மிகுந்த பேரிழப்பாகும்.

கடந்த 2 ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரைத்து ஆசிரியர் கி.வீரமணியின் வாழ்க்கைத் துணைவியார் மோகனா வீரமணிக்கு பயனாடை அணிவித்து மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்ட காட்சி இன்னமும் நம் நெஞ்சில் பசுமையாகக் காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் அவர்களின் மரணம், அதுவும் விபத்தில் சிக்கி ஏற்பட்ட மரணம் நம்மால் தாங்கிக் கொள்ள முடியாத பெரும் துயரத்தை அளிக்கிறது.

அருமை சகோதரியாரை இழந்த துயரில் துடிக்கும் அவரது வாழ்க்கைத் துணைவர் டாக்டர் இரா.கௌதமன், அவரது இல்லத்தவருக்கும் பெரியார் இயக்கக் குடும்பத்தின் பெருமைக்குரிய தலைவரான கி.வீரமணிக்கும் ஆழ்ந்த இரங்கலையும் மறைந்து நம் நெஞ்சில் நிறைந்துள்ள டாக்டர் பிறைநுதல் செல்வியின் அரும்பணிக்கு வீரவணக்கத்தையும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் துயரம் தோய்ந்த உள்ளத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

 

More News >>