கஜா பாதித்த மக்களுக்கு கோவை இளைஞர்கள் உதவி
கஜா புயல் பாதிப்பில் இருந்து நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மீண்டு வருகின்றன. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவி கரம் நீண்டு வருகிறது. இளைஞர்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு மக்களுக்கு தேவையான உதவிகள் செய்கின்றனர்.. அரசு சார்பில் சாய்ந்த மின்கம்பங்களை சரி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வீடு, வாசல்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு கோவை, சவுரிபாளையத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உதவி புரிந்துள்ளனர். அதிராம்பட்டினத்தை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு போர்வைகள், சோலார் லேம்ப், கொசு வலை, தார்பாய், மளிகை சாமான்களை அவர்கள் வழங்கியுள்ளனர். கோவையைச் சேர்ந்த கிங்ஸ்லி, ஜெயக்குமார், செல்வக்குமார், ஜெபஸ்டின், ராஜேஷ், பட்டுராஜ், பால்ராஜ் மற்றும் அகஸ்டின் ஆகியோர் இணைந்து இந்த பணியை மேற்கொண்டனர்.
புயல் பாதிக்கப்பட்ட பகுதியின் தற்போதையை நிலை குறித்து ஒருங்கிணைப்பாளர் கிங்ஸ்லி கூறுகையில், '' கிராமங்கள் எல்லாம் அலங்கோலமான நிலையில் உள்ளன. தமிழகம் முழுவதும் இருந்து உதவி கிடைத்தால் மட்டுமே அங்குள்ள மக்கள் துயரத்தில் இருந்து மீள முடியும். பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.
தொடர்ச்சியாக உதவி கிடைத்தால் மட்டுமே டெல்டா மாவட்ட மக்கள் பாதிப்பில் இருந்து மீள முடியும். எனவே தமிழக இளைஞர்கள் கஜா பாதிப்பில் இருந்து டெல்டா மக்களை மீட்டெடுக்கும் முயற்சியில் தொடர்ந்து இறங்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.