நீயா!நானா! ஸ்டாலின் Vs தமிழிசை: ட்விட்டரில் பரபரப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜனும் ட்விட்டரில் ஒருவையொருவர் ரீ-ட்வீட் செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் நேற்று நடந்த அனைத்து கட்சி போராட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசும்போது "தமிழகம் மீது மோடிக்கும், பாஜக விற்கும் அக்கறை இல்லை. எந்த முகத்தை வைத்துக்கொண்டு இங்கு தாமரை மலரும்? தமிழகத்தில் தண்ணீர் இல்லை. புல்கூட முளைக்காத சூழலில் தாமரை மலர்ந்துவிடுமா? புல்லுக்கே வக்கில்லை தாமரை மலர்ந்திடுமாம்" எனக் கேளியாக கூறினார்.

அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்த பாஜக தலைவர் தமிழிசை "இனி மழைக்காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும். குளம் நிறையும். தாமரை மலரும். செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம். ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தாகிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரையை மலரச் செய்வோம். காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும்" என ட்வீட் செய்துள்ளார்.

தமிழிசையின் ட்வீடிற்கு மு.க.ஸ்டாலின் "சகோதரி தமிழிசைக்கு ஒரு தகவல்: தாமரை மலர சூரிய சக்தி தேவை! சூரிய சக்தி நினைத்தால் தாமரையும் கருகும்!" என ரீட்வீட் செய்துள்ளார்.

இதற்கு பதிலடியாக பல ட்வீடிற்கு ரீட்வீட் செய்து வந்தார் தமிழிசை. அப்படி மு.க.ஸ்டாலினின் ஒரு ட்வீட்டை குறிப்பிட்டு "அதிகாலையில் சூரியன் உதிப்பதற்குள் இதழ் விரித்து தாமரை மலர்கிறது. இது அன்றாட நிகழ்வு ..மேக மூட்டத்தில் சூரியன் மறைந்தாலும் தாமரை மலரும். சூரிய சக்தி செடியில் இருக்கும் மலரைக் கருகச்செய்யும். குளத்து நீரில் மிதக்கும் தாமரையை கருகச் செய்யாது, கருகச் செய்யவும் முடியாது. இது இயற்கை நியதி" என தெரிவித்துள்ளார் தமிழிசை சவுந்தரராஜன்.

இந்த வார்த்தை மோதலால் ட்விட்டர் தளத்தில் பரபரப்பு நிலவியுள்ளது.

More News >>