தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை: வானிலை ஆய்வு மையம்
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் முதல் தெற்கு ஆந்திர கடற்கரை வரையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வந்தது. இது தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து குமரிக்கடல் முதல் வடக்கு கேரளா பகுதி வரை நிலவுகிறது.
இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மற்றும் மிதமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சோழவரத்தில் 8 செ.மீ., மழையும், தாமரைப்பாக்கத்தில் 5 செ.மீ., மழையும், சென்னை விமான நிலையம், பொன்னேரி, கடலூர் பகுதிகளில் 2 செ.மீ மழையும் பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று முதல் 3 நாட்களுக்கு தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை பொறுத்தவரையில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை முதலே சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.