மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு ஹார்ட் அட்டாக்: அப்பலோவில் அனுமதி
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த சென்னை வந்த மக்களை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினர். இதேபோல், பல்வேறு கட்சியினர் முதல் தொண்டர்கள் வரை மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், மக்களவை துணை சபாநாயகரும், கரூர் தொகுதி அதிமுக எம்பியுமான தம்பிதுரை ஜெயலலிதாவின் நினைவஞ்சலியில் கலந்துக் கொள்ள சென்னை வந்தார். நிகழ்ச்சிகள் முடிந்த நிலையில், தம்பிதுரைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக தம்பிதுரையை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு உடனடியாக டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். பின்னர், ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு தம்பிதுரை அவசர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தம்பிதுரையை நலம் விசாரித்து செல்ல முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்னும் சற்று நேரத்தில் அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.