உரிமம் பெறாமல் விடுதி நடத்தினால் 2 ஆண்டு சிறை: மாவட்ட ஆட்சியர் அதிரடி

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் கண்டுப்பிடித்ததை அடுத்து, பெண்கள் விடுதி உரிமையாளர்களுக்கு கடும் புதிய கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் சிறுவர்கள், ஆதரவற்றோர், பெண்களுக்கு என விடுதிகள் தமிழக அரசு மற்றும் தனியார்களால் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள், முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. பல தனியார் விடுதிகள் அரசு அனுமதியின்றியும் இயங்கி வருகின்றன.

தொடர்ந்து, பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தி போலீசாரிடம் சிக்கிய விடுதி உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னையில் பெண்கள் விடுதி நடத்துபவர்களக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதில், பதிவு பெற்ற விடுதிகளின் பெயர் பட்டியல், விடுதிகளின் முகவரியோடு டிசம்பர் 31ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் இணையதளத்தில் வெளியிடப்படும்.

விடுதி நடத்துவோர் மாவட்ட சமூக நல அலுவலரிடம் பதிவு சான்று, உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறாமல் விடுதிகள் நடத்தினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். உரிய அதிகாரியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட கட்டடங்களில் மட்டுமே விடுதி, காப்பகம் அமைக்க வேண்டும். பெண்கள் விடுதியில் பெண் காப்பாளர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். விடுதியில் பணியாற்றுபவர்கள் காவல்துறையின் நன்னடத்தை சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். அதேபோல விடுதி காப்பாளர், துணை காப்பாளர் மற்றும் பெற்றோர் ஆகியோருக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வழங்க வேண்டும். இருபாலர் விடுதியில் ஆண் மற்றும் பெண்களுக்கு என தனித்தனி கட்டடம் அமைக்க வேண்டும். விடுதி காப்பாளர் மற்றும் துணை காப்பாளர்கள் விடுதியில் தான் தங்க வேண்டும், வெளியில் தங்கக்கூடாது. தாழ்ப்பாள்கள் போன்றவை சரியாக இருக்க வேண்டும், உரிய வருகைப்பதிவேடு இருக்க வேண்டும். 50க்கும் அதிகமான பெண்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் கட்டாயமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். விடுதியில் குறைகள் மற்றும் உரிமம் பெறாத விடுதிகள் குறித்து புகார் தெரிவிக்க 9444841072 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு புகைப்படங்களுடன் புகார் அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
More News >>