குன்னூர் - ஊட்டி இடையே விரைவில் ரயில் பஸ் சேவை
குன்னூர் - ஊட்டி இடையே ரயில் பஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஊட்டி செல்ல வரும் பயணிகள் மலை ரயிலில் செல்லவே விரும்புவார்கள். பொறுமையாக செல்லும் மலை ரயிலில் இருந்து இயற்கை அழகையும், குகைகளுக்குள் செல்லும் அனுபவத்தையும், குட்டி குட்டி நீர்வீழ்ச்சிகளையும், பள்ளத்தாக்குகளையும் ரசித்துக் கொண்டே செல்லலாம்.
மேட்டுபாளையம் - ஊட்டிக்கு பேருந்து சேவையும் உள்ளது. ஆனால், பெரும்பாலும் சுற்றுலா பயணிகள் விரும்புவது மலை ரயிலை தான்.
இந்நிலையில், குன்னூர் முதல் ஊட்டி இடையேயான பயணத்தை ரயில் பஸ் மூலம் இயக்க சேலம் ரயில்வே கோட்டம் முடிவு செய்தது. இதற்காக, மேற்கு ரயில்வேயில் அகமதாபாத் - குஜராத் இடையே இயக்கப்பட்டு வந்த ரயில் பேருந்து மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டு, சோதனை ஓட்டம் நேற்று நடத்தப்பட்டது.
60 பேர் பயணிக்கக்கூடிய இந்ந ரயில் பேருந்தில் 2 இஞ்ஜின்கள் உள்ளது. 180 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் கொண்டுள்ளது.
முதற்கட்டமாக, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து ஊட்டி மலை ரயில் பாதை வரை 5 முறை சோதனை ஓட்டம் நடைபெற்றது. பிறகு, கல்லார் வரை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
சோதனை ஓட்டம் வெற்றி பெற்ற நிலையில், இந்த ரயில் பேருந்து திருச்சி பொன்மலையில் உள்ள ரயில்வே பணிமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு புதிய தொழில்நுட்பத்துடன் புதிய பொலிவுடன் விரைவில் குன்னூர் - ஊட்டி இடையே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பேருந்து சோதனை ஓட்டத்தின்போது, சேலம் ரயில்வே டிவிஷன் சீனியர் மெக்கானிக்கல் இன்ஜினியர் முகுந்தன், சீனியர் டிவிஷனல் எலக்ட்ரானிக் இன்ஜினியர் அரவிந்தன், மேட்டுப்பாளையம் கோச் பொறியாளர் முகமது அஸ்ரப், குன்னூர் ரயில்வே மேலாளர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.