எக்மோ பொருத்திய பின்னும் துடித்த இதயம்! - விலகாத ஜெயலலிதா மரணத்தின் மர்மம்
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா இறந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. அவரது மரணத்தில் இன்றளவும் மர்மம் நீடிக்கிறது. இந்த மர்மத்தை விடுவிக்கும் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார் விசாரணை ஆணையத்தின் தலைவர் ஆறுமுகசாமி.
ஆனால், ஜெயலலிதா மரணத்தின் மர்மம் விடுபட்டதாகத் தெரியவில்லை. மெரினா சமாதியில் யார் பெரியவர் என செல்வாக்கைக் காட்டியதோடு முடித்துக் கொண்டனர் தமிழக முதல்வர் எடப்பாடியும் தினகரனும்.
இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சில கேள்விகளை எழுப்பியிருக்கிறார் சமூக ஆர்வலரான கீதா நாராயணன். அவர் கேட்டுள்ள கேள்விகள் அனைத்தும் சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
அவரது பதிவு பின்வருமாறு:
ஜெ எப்படித்தான் இறந்தார்?
அவருடைய அட்மிஷன் சம்மரியில் என்ன எழுதப்பட்டிருந்தது? ஏன் சிசிடிவி கேமராபதிவு வீட்டிலும் மருத்துவமனையிலும் கிடைக்கவில்லை?
அவருடைய கையெழுத்தைப் போட்டவர்களுக்கு என்ன தண்டனை? அரசு ஆணையில் அவர் கையெழுத்தைப் போட்டவர் வேறு எதில் கையெழுத்திட்டிருக்கக் கூடும்? அவர் உடல்நிலை பற்றிப் பொய்யான மருத்துவ அறிக்கைகள் கொடுத்தவருக்கு என்ன தண்டனை?
ஏன் ராகுல்காந்தி முதல் ஸ்டாலின் வரை அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை? அவருக்குக் கால்கள் இருந்தனவா? கவர்னர் வித்யாசாகர் ஏன் அவர் உடல்நிலையைப்பற்றிப் பொய்யுரைத்தார்?
வீட்டிற்குள்ளேயே இருந்த மருத்துவமனை ஏன் அவர் சர்க்கரையைக் கூடக் கட்டுப்படுத்தவில்லை? அப்பல்லோவில் தேவையே இல்லாமல் தொடர்ந்து இருந்து கொண்டிருந்த வெங்கையா நாயுடுவை ஏன் கமிஷன் விசாரிக்கவில்லை?
காணாமல் போன அந்த உதவியாளர் பெண் என்ன ஆனார்? ஜெயலலிதா வீட்டில் கடந்த காலத்தில் வேலை செய்த உதவியாளர்களை ஏன் விசாரிக்கவில்லை?
டிசம்பர் 4 ஆம் தேதி நின்று போன இதயத்தை இயங்க வைக்க எக்மோ கருவி பொருத்திய பின் 60 சதவீதம் துடித்த இதயத்தை ஏன் நிறுத்தினார்கள்?
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன் அதிமுகவின் பவர் டைனமிக்ஸ் கூட்டங்கள் பற்றி ஏதாவது விசாரணை நடந்ததா? இதற்குப்பதில் கிடைக்கும் எனத் தோன்றவில்லை. பதில்கிடைத்தால் தேர்தல் ஜனநாயகத்தின் முக்கியமான சதிகளில் ஒன்றாக இருக்கும்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
-அருள் திலீபன்