வைகோ அடித்த கூத்துகளை மறக்கவில்லை - பழைய பகையை உரசும் திருமாவளவன்
துரைமுருகன் தூண்டிவிட்ட கூட்டணி தீ கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்க, திருமாவளவனும் வைகோவும் மோதலைத் தொடங்கிவிட்டனர். இதற்கான தொடக்கப்புள்ளி சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் இருந்தே தொடங்கிவிட்டதாம்.மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டது ஐந்து கட்சிகளின் கூட்டணி. திருமாவளவன் தொடங்கி வைத்த மக்கள் நலக் கூட்டணிக்குள் வைகோவும் இடதுசாரிகளும் மனிதநேய மக்கள் கட்சியும் இருந்தன.
கட்டாயம் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில், கடைசி நேரத்தில் ஜகா வாங்கிக் கொண்டது ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி. தொழிலபதிபர்களின் உதவியோடு விஜயகாந்தையும் கூட்டணிக்குள் வந்து சேர்ந்தார் வைகோ. இதற்காக 500 கோடி ரூபாய் கைமாறியதாக தனியார் ஊடகம் எழுப்பிய கேள்வியை எதிர்கொள்ள முடியாமல், கொந்தளித்தார் வைகோ.
'எதிர்க்கட்சிகள் சிதறினால் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு' என கார்டன் தரப்பில் சரியாகக் கணித்தனர். இந்தக் கணிப்புக்கு பிள்ளையார் சுழி போட்டவர் நடராஜன் என்கிறார்கள். இதையெல்லாம் அறியாமல், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக நாங்கள் களமிறங்கியிருக்கிறோம். இந்தக் கட்சிகள் ஐம்பது ஆண்டுகள் ஆண்டது போதும் என்றெல்லாம் மக்கள் நலக் கூட்டணி பிரசாரம் செய்தது.
கடைசி நேரத்தில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுங்கள் என வலியுறுத்தியதால், ஜெயலலிதாவிடம் கோபத்தைக் காட்டிவிட்டு வெளியே வந்தார் ஜி.கே.வாசன். வேறுவழியில்லாமல் ம.ந.கூவுக்குள் அவர் ஐக்கியமானார். இந்தத் தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியைத் தழுவினர்.
அதைவிட, காட்டுமன்னார் கோயிலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார் திருமாவளவன். அதே தொகுதியில் திருமாவளவன் என்ற பெயரில் போட்டியிட்ட சுயேட்சை ஒருவர் ஆயிரம் வாக்குகளை வாங்கியதும், அவரைத் தேடிப் போய் வி.சி.க நிர்வாகிகள் அடிக்கப் பாய்ந்ததும் தனி வரலாறு.
இந்தத் தோல்விக்கு வைகோவைத்தான் பிரதானமாக நினைத்தார் திருமா. ' கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியதில் இருந்தே பல்வேறு குழப்படிகளைச் செய்தார் வைகோ. பிரசாரத்துக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் கோபத்தைக் காட்டுவதும் பின்னர் ம.ந.கூ யூ ட்யூபில் தோன்றி ஆதங்கப்படுவதும் என ஆடிக் கொண்டிருந்தார்.
தொகுதி பங்கீட்டிலும் கம்யூனிஸ்ட்டுகளின் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டார் வைகோ. தேர்தல் முடிவுகளுக்கு முன்னரே, உள்ளாட்சித் துறை யாருக்கு? முதல்வர் பதவி யாருக்கு என மேடையிலேயே வெளிப்படையாகப் பேசிய கூத்துக்களும் நடந்தன.
ஒருகட்டத்தில் தலையில் பச்சைத் துண்டைக் கட்டிக் கொண்டு பிரசாரம் செய்தார். அதிமுகவின் சின்னமான பச்சைத் துண்டை இவர் ஏன் கட்டுகிறார் என குழப்பம் அடைந்தார் திருமா. இருந்தாலும் பல்லைக் கடித்துக் கொண்டு தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருந்தார். அதிமுக எதிர்பார்த்ததைப் போலவே வெற்றி பெற்றிருந்தது. ம.ந.கூவால் முதல்வராக முடியாமல் வேதனை அடைந்தார் ஸ்டாலின்.
இந்த சம்பவம் நடந்து சில மாதங்களுக்குப் பிறகு, ' நடராஜனுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்' என வைகோ பேசியதையும் வி.சி.கவினர் மறக்கவில்லை. இன்று பண்ணை மனோபாவத்தில் பேசுகிறார் வைகோ என வன்னியரசு பேசுவதும் யார் சொல்லி வன்னியரசு பதிவிட்டார் என திருமா மீது வைகோ பாய்வதற்கும் பிள்ளையார் சுழிபோட்டது ம.ந.கூ அணிதான்' என்கின்றனர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள்.
- அருள் திலீபன்