தஞ்சை பெரிய கோவிலைப் பாழாக்கலாமா? - ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்குக் கிளம்பும் எதிர்ப்பு
தஞ்சைப் பெரிய கோயிலைக் காப்பாற்றுங்கள் எனக் கூக்குரல் எழுப்புகின்றனர் பண்பாட்டு அறிஞர்கள். சாமியார் ரவிசங்கர் நடத்தப்போகும் ஆன்மிகப் பயிற்சி வகுப்புக்கு எதிராகத்தான் அவர்கள் குரல் கொடுக்கின்றனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள பதிவில், ' வாழும் கலை என்ற அமைப்பை நடத்திவரும் சாமியார் ஶ்ரீ ஶ்ரீ ரவிஷங்கர் உலகப் புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோயிலில் ஆன்மீகப் பயிற்சி வகுப்பு நடத்தப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது. டிசம்பர் 7, 8 தேதிகளில் அந்த நிகழ்ச்சி நடக்கவுள்ளது.
அதற்காக கோயிலின் உள்ளே தடுப்புகள் அமைத்து அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது . தமிழக அரசின் தொல்லியல் துறைக்குத் தெரியாமல், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனம் ( ASI) இதற்கு அனுமதி வழங்கியிருப்பதாகத் தெரிகிறது.
பாதுகாக்கப்பட்ட கோயிலில் இப்படி தனியார் நிகழ்ச்சி நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது எப்படி?
பண்பாட்டு நிகழ்ச்சி நடுத்துவதாகக்கூறி யமுனை நதிக்கரையை சேதப்படுத்தியதற்காக ஏற்கனவே உச்சநீதிமன்றம் இந்த சாமியாரின் அமைப்புக்கு 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இந்நிலையில் தஞ்சைப் பெரிய கோயிலையும் பாழாக்க எப்படி இவரை அனுமதித்தார்கள்? UNESCO அமைப்பால் உலகப் பாரம்பரிய மையமாக அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சைப் பெரிய கோயிலை சீரழிக்க நடக்கும் இந்த முயற்சியைத் தமிழக அரசு அனுமதிக்கலாமா?
உடனடியாக மாண்புமிகு தமிழக முதல்வர் தலையிட்டு இந்த சட்டவிரோத நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்தவேண்டும்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.