மின்னல் வேக தண்ணீர் லாரி மோதி சிறுமி பலி! பள்ளி வேனை தவறவிட்டதால் நேர்ந்த பரிதாபம்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் தண்ணீர் லாரி மோதி 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கேரளாவை சேர்ந்தவர் லிஜோ. இவரது மனைவி ஜினினா. இவர்களது மகள் ஜெமீமா அச்சு மேத்யூ (13). இவர் சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். லிஜோ கேரளாவில் விவசாயம் செய்து வருவதால், சென்னை கீழ்ப்பாக்கம் மண்டபம் சாலையில் மனைவி ஜினினா மற்றும் ஜெமீமாவும் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜெமீமா இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு தாயாராகினார். ஆனால், பள்ளி வேனை தவறவிட்டதால், தனது மாமாவுடன் ஜெமீமா மற்றும் மாமாவின் மகள் கிஷியா ஆகியோர் சென்றனர்.
அப்போது, கீழ்பார்க்கம் நியூ ஆவடி சாலையில் உள்ள வாட்டர் டேங்கை நெருங்கியபோது, அங்கு வேகமாக வந்த லாரி ஒன்று மோதியது. இதில் நிலைத்தடுமாறி மூன்று பேரும் பைக்கில் இருந்து கீழே விழுந்தனர். இதில், ஜெமீமாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெமீமாவை மீட்டு உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனாலும், ஜெமீமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து, தண்ணீர் லாரி ஓட்டுனர் கோவிந்தராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ம
பள்ளி நேரங்களில் லாரிகள் வேகமாக இயக்குவதை போக்குவரத்து போலீசார் கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.