கண்களை உறுத்தாது... வாட்ஸ் அப்பில் வருகிறது டார்க் மோட்!
வாட்ஸ் அப் செயலியில் டார்க் மோட் (Dark Mode) விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு இயங்குதளங்களிலும் இந்த வசதி கிடைக்கும்.இரவு நேரத்தில் வாட்ஸ் அப்பில் அரட்டையடிக்கும்போது போன் திரையிலிருந்து வரும் வெளிச்சம் கண்களை உறுத்தக்கூடிய அளவு பிரகாசமாக இருப்பதால், 'டார்க் மோட்' பயனர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கொண்டு வரப்பட்டுள்ளது. டார்க் மோடில் இடைமுகம் (Interface) ஒளிகுறைந்த நிலையில் கறுப்பாக இருக்கும். திரையின் வெளிச்சம் கண்களுக்கு கூச்சத்தை தராது. இதற்கான முயற்சியில் வாட்ஸ் அப் நிறுவனம் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது.
யூடியூப், ட்விட்டர், கூகுள் மேப் உள்ளிட்ட பல செயலிகளில் ஏற்கனவே 'டார்க் மோட்' பயன்பாட்டில் உள்ளது. வாட்ஸ் அப்பில் வரவுள்ள டார்க் மோடை, பயனாளர்கள் தங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் manually- யாக மாற்றிக் கொள்ளலாம். தானியங்கு விதத்திலும் (automatically) குறித்த நேரத்துக்கு டார்ப் மோடுக்கு மாறிக்கொள்ளும்படியான வசதியையும் வாட்ஸ் அப் நிறுவனம் தர திட்டமிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் உள்ளது போல், க்யூஆர் (QR)குறியீட்டைக் கொண்டு தொடர்புகளை உருவாக்கிக் கொள்ளும் வசதியையும் (Share Contact Info via QR) வாட்ஸ் அப் தர இருக்கிறது. ஒரு நபருக்கான க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, அவரை தொடர்பு பட்டியலில் சேர்த்துக்கொள்ள முடியும்.
இன்ஸ்டாகிராமிலுள்ள 'நேம்டேக்' (Nametag) போன்றது இந்த வசதியாகும். உங்களுக்கென வாட்ஸ் அப் தனித்துவமான க்யூஆர் குறியீட்டினை உருவாக்கித் தரும். பயனாளர், இதை மற்றவரோடு பகிர்ந்து கொண்டால் அவர் தமது வாட்ஸ் அப்பின் அனைத்துத் தொடர்பு பட்டியலிலும் இவரை இணைத்துக் கொள்ள முடியும்.
கடந்த ஆகஸ்ட் மாதம், வாட்ஸ் அப் நிறுவனம் செயலிக்கான காப்புநகல் கோப்புகள் கூகுள் டிரைவின் சேமிப்பளவில் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது என்று அறிவித்திருந்தது. அந்த வசதியும் இப்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆகவே, உங்கள் வாட்ஸ் அப் காப்புநகல் கோப்புகள் இனி கூகுள் டிரைவின் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது.