மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளையின் திடீர் மரண வாக்குமூலம் வீடியோவால் பரபரப்பு!

மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்த விவகாரத்தில், என் உயிரை பணயம் வைத்தாவது  பார்முலாவை மக்களிடம் ஒப்படைப்பேன் ,  இது என் மரண வாக்குமூலம் என்று ராமர் பிள்ளை வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் ராமர் பிள்ளை. 1990-ம் ஆண்டில்  மூலிகை பெட்ரோல் கண்டுபிடித்திருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதன்மூலம், பிரபலமடைந்த ராமர் பிள்ளை, தனது தயாரிப்புக்கு 'ராமர் தமிழ் தேவி மூலிகை எரிபொருள்' என்று பெயரிட்டார். மூலிகை எரிபொருளில் பெட்ரோலியப் பொருட்களான நாப்தா போன்றவற்றை கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள் ராமர் பிள்ளையை கைது செய்தனர். வழக்கில்,  2016-ம் ஆண்டு ராமர்பிள்ளை உள்ளிட்ட 5 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன், தன்னுடைய கண்டுபிடிப்பு உண்மைதான் என்றும் அதனை விரைவில் நிரூபிப்பேன் என்று ராமர் பிள்ளை சவால்விட்டு வந்தார் இந்நிலையில், உயிரை பணயம் வைத்தாவது தன் கண்டுபிடிப்பை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பேன் என்று  ராமர்பிள்ளை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வீடியோவில், '' மரணத்தின் விளிம்பில் நின்று கேட்டுக் கெள்கிறேன். என்னுடைய தமிழ் மக்களுக்கு அன்பான வேண்டுகோள். இது என்னுடைய இறுதி காணொளி. இனி நான் பேச மாட்டேன். இது என்னுடைய மரண வாக்குமூலம். என் உயிரை பணயம் வைத்தாவது எனது கண்டுபிடிப்பை உங்கள் கையில் சேர்ப்பேன்  டிசம்பர் மாதம் 10- ம் தேதி முடிவு செய்திருக்கிறேன். அன்றை தினத்தில் மூலிகை பெட்ரோலின் பார்முலாவை அறிவிப்பேன்.நீதிமன்றம் தாமாக முன்வந்து இதை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும். நான் எனது கண்டுபிடிப்பை நிரூபிக்காவிட்டால் ஆயுள்தண்டனை அல்லது தூக்குதண்டனை கூட கொடுத்து சிறையில் அடைத்துவிடுங்கள். 

வரும் 11- ம் தேதி உயிருடன் இருப்பேனா இல்லையா என்பது நீதிபதி கையிலும், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கையிலும், தமிழிசை சவுந்தரராஜன் கையிலும் தான் உள்ளது. 10- ம் தேதி என் உயிர் பிரிந்துவிட்டாலும், அன்று இரவு எனது இறுதி காணொளி வெளியாகும். அதில், என் அருகில் கல்லூரி மாணவ, மாணவிகள் இருவர் இருப்பார்கள். அவர்கள், மூலியை பெட்ரோல் செய்முறை விளக்கத்தை அளிப்பார்கள். இதன் பிறகு, என்னை குறை கூறியவர்கள், குற்றம் சொல்லியவர்கள் கண் கலங்குவீர்கள். இது உறுதி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More News >>