மேகதாதுவில் அணை நாளை கர்நாடக அதிகாரிகள் ஆய்வு!
மேகதாதுவில் அணை கட்டும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் திட்ட வரைவுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியதால், தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதனால், மேகதாது குறுக்கே புதிய அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருவது தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தில் இன்று மாலை 4 மணிக்கு சிறப்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு கூட்டம் 4 மணிக்கு தொடங்கியது. கூட்டத்தில், மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிராகவும், தமிழக அரசின் அனுமதி இல்லாமல் காவிரியின் குறுக்கே எந்த பகுதியிலும் புதிதாக அணை கட்ட கார்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்ற சிறப்பு தீர்மானத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். தொடர்ந்து, தீர்மானத்தின் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
பின்னர், தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ அபுபக்கர் ஆகியோரும் பேசினர். இதையடுத்து, ஆளும் மற்றும் எதிர்காட்சிகளின் ஆதரவுடன் வாக்கெடுப்பு நடத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், பெங்களூருவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், கர்நாடக முன்னாள் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, கர்நாடக அரசு சார்பில் பேசிய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார், "மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி. இத்திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை. அணை கட்டுவது குறித்து நாளை முதல் ஆய்வுப் பணிகள் தொடங்கப்படும். வனத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் நாளை ஆய்வு மேற்கொள்கின்றனர்" என்றார்.