அமைச்சர்களை அரிவாள் காட்டி மிரட்டி வீடியோ வெளியிட்ட சர்கார் விஜய் ரசிகர்கள் இருவர் கைது
சர்கார் படம் பிரச்னையின்போது, அரிவாள் காட்டி அதிமுக அமைச்சர்களை மிரட்டி வீடியோ ஒன்றை வெளியிட்ட விஜய் ரசிகர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி அன்று சர்கார் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் ரிலீஸ் ஆனது. சர்கார் படத்தில், அரசு வழங்கும் இலவச பொருட்களை தூக்கி எறியும் காட்சி, ஜெயலலிதாவின் புனைப்பெயரைக் கொண்டு படத்தில் வில்லி கதாப்பாத்திரம் இருப்பதும் அதிமுகவினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனால், படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் தியேட்டர் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த காட்சிகளை நீக்கும் வரை படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை உள்பட பல இடங்களில் சர்கார் பட பேனர்கள் கிழிக்கப்பட்டும், தீயிட்டு கொளுத்தும் செயலிலும் அதிமுகவினர் ஈடுபட்டனர். இதனால், விஜய் ரசிகர்கள் கொந்தளித்தனர்.
இந்நிலையில், விஜய் ரசிகர்கள் இரண்டு பேர் அதிமுக அமைச்சர்களை மிரட்டும் தொனியில் வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அந்த வீடியோவில், "விஜய் ரசிர்கள் ஒன்னா சேர்ந்தோம்னு வை ஒருத்தன் கூட உசுரோடு இருக்க மாட்டீங்க.. தளபதியின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தான் உங்கள உசுரோட விடுறோம். இல்ல நேரா வந்து அறுத்துட்டு போய்டுவோம்" எதகாத வார்த்தைகளில் மிரட்டினர். இந்த வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலானது. இதையடுத்து, பொது இடத்தில் அரிவாள் காட்டி மிரட்டியதால் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட விஜய் ரசிகர்கள் யார் என்பது குறித்து சைபர் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதில், எண்ணூர் கமலாம்மாள் நகரைச் சேர்ந்த சஞ்சய் மற்றும் லிங்கதுரை என்பதும், அவர்களை வீடியோ பதிவு செய்து வெளியிட்ட வடபழனி கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அனிஷேக் என்பதும் தெரியவந்தது.இதையடுத்து, சஞ்ஜையும், அனிஷேக்கையும் கைது செய்த போலீசார் அரிவாள் மற்றம் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக இருக்கும் லிங்கதுரையை போலீசார் தேடி வருகின்றனர்.