கருணாநிதி சிலை திறப்பு விழா: ரஜினி, கமலுக்கு அழைப்புவிடுத்த ஸ்டாலின்
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் முழு உருவ சிலை திறப்பு விழாவில் கலந்து கெள்ளும்படி ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆகஸ்டு மாதம் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிறகு, திமுக தலைவராக மு.க.ஸடாலின் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், கருணாநிதியின் முழு உருவ சிலை அறிவாலய வளாகத்தில் திறக்கப்படும் என ஏற்கனவே திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அண்ணா, கருணாநிதி ஆகியோரது சிலைகள் ஒரே இடத்தில் அமைக்கப்படுகின்றன. அதற்கான பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.இந்த சிலைகள் திறப்பு விழா வரும் 16ம் தேதி நடைபெறுகிறது. கருணாநிதியின் சிலையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்கிறார். இதற்காக, மு.க.ஸ்டாலின் வரும் 9ம் தேதி டெல்லி சென்று நேரில் அழைப்பு தர இருக்கிறார்.
இவரை தவிர, அகில இந்திய அளவில் தலைவர்களும், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுவை முதல்வர் நாராயணசாமி ஆகியோரையும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருக்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.