இணையதளங்களை பாதுகாக்கும் கேப்சாவை உடைக்க முடியும்! -ஆய்வு முடிவு
பல இணையதளங்களில் உள்ளே நுழைவதற்கு முன்பு, முயற்சிப்பது மனிதன் தான் என்பதை உறுதி செய்யும் வண்ணம் பாதுகாப்பு குறியீடு (Captcha) கொடுக்கப்பட்டிருக்கும். மாறி மாறி இருக்கும் எழுத்துகள், எண்கள் மற்றும் குறியீடுகளை சரியாக உள்ளிட்டால் மட்டுமே இணையதளம் திறக்கும்.
மனிதர்களை தவிர, இயந்திரங்கள் அந்தக் குறியீட்டை படித்து இணையதளங்களை திறந்து விடாமல் இருப்பதற்காக இந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் இயந்திர வழிக்கற்றலை (Machine Learning) பயன்படுத்தி இந்த எழுத்து பாதுகாப்பு குறியீடுகளை உள்ளிட முடியும் என்று பிரிட்டன் மற்றும் சீன பல்கலைக்கழகங்களிலுள்ள ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளார்கள்.
ஜிஏஎன் என்னும் ஜெனரேடிவ் அட்வர்சரியல் நெட்வொர்க் தொழில்நுட்பத்தை கணினி ஒன்றில் பயன்படுத்தி 0.05 விநாடி நேரத்தில் கேப்சாவை உடைக்க முடியும் என்று கனடா நாட்டின் டொரண்டோ நகரில் நடைபெற்ற கணினி மற்றும் தொடர்பு பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சீனாவால் நிதியுதவி செய்யப்படும் இந்த ஆய்வு பிரிட்டனின் லான்காஸ்டர் பல்கலைக்கழகம், சீனாவின் நார்த்வெஸ்ட் மற்றும் பெகிங் பல்கலைக்கழகங்களில் நடைபெற்று வருகிறது.
கேப்சா என்னும் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவோர், ஆய்வாளர்கள் மற்றும் இணைய தாக்குதல் நடத்துவோர் இயந்திர வழிக் கற்றலை பயன்படுத்தி, பாதுகாப்பு குறியீட்டை உடைக்கும் வண்ணம் செயற்கை நுண்ணறிவை உருவாக்க முடியும் என்று இந்த ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இபே, விக்கிப்பீடியா மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற பிரபல இணையதளங்கள் உள்பட பல்வேறு இணையதளங்களில் இம்முறை பரிசோதிக்கப்பட்டுள்ளது. 11 பிரபலமான இணையதளங்கள் உள்பட 33 இணையதளங்களுக்கான பாதுகாப்பு குறியீடுகள்மேல் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இணையதளங்களை பாதுகாக்க வேறு வழிகளை உருவாக்க வேண்டிய காலம் வந்து விட்டது.