தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் நிகழ்ச்சிக்கு தடை: ஐகோர்ட் உத்தரவு
தஞ்சை பெரியகோவிலில் ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் வாழும் கலை அமைப்பின் தியான பயிற்சி வகுப்பு நிகழ்ச்சிக்கு தடை விதித்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் மேடை, பந்தலை அகற்றவும் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சையின் பிரகதீஸ்வரர் கோவிலில் வாழும் கலை அமைப்பு சார்பில் ஆன்மீக தியான பயிற்சி வகுப்புக்கான நிகழ்ச்சி நாளை மற்றும் நாளை மறுநாள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு மூன்று நேரங்களில் நடைபெற இருக்கும் இந்நிகழ்ச்சிக்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது.
ஆனால், தஞ்சை கோவிலில் நிகழ்ச்சியை நடத்த தமிழக அரசிடம் வாழும் கலை அமைப்பு எந்த அனுமதியும் வாங்கவில்லை. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாழும் கலை அமைப்பு தொடர்ந்து செய்து வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்நிகழ்ச்சிக்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், பழமையும், பாரம்பரியமும் மிக்க தஞ்சை பெரிய கோவிலில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிப்பது கோவிலின் சிறப்பை பாதுகாக்க தவறும் நடவடிக்கை ஆகும். ஏற்கனவே, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் யமுனை நதிக்கரையில் மாசு ஏற்படுத்தும் விதமாக நிகழ்ச்சி நடத்தியதற்காக பசுசை தீர்ப்பாயம் 5 கோடி ரூபாய் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது. அதனால், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடப்பட்டது.
இதையடுத்து, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இன்று பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். அதன்படி, இன்று பிற்பகல் 1 மணியளவில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, தமிழகத்தில் எவ்வளவோ இடம் இருக்கும்போது தஞ்சை பெரிய கோவிலில் எதற்காக நிகழ்ச்சி நடத்த வேண்டும்.
இதற்கு எப்படி அறநிலையத்துறை அனுமதி வழங்கியது ?. தஞ்சை பெரிய கோவிலில் வாழும் கலை நிகழ்ச்சிக்கு இடைக்காலை தடை விதிக்கப்படுகிறது. தஞ்சை பெரிய கோவிலில் போடப்பட்டுள்ள மேடை, பந்தல், கூரை ஆகியவற்றையும் உடனடியாக அகற்ற வேண்டும். இந்நிகழ்ச்சிக்கு அறநிலையத் துறை அனுமதி வழங்கியது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் அதிரடி உத்தரவை பிறப்பித்தனர்.