ஈஃபில் டவர் இழுத்து மூடப்படுகிறது: பிரான்ஸில் அரசுக்கு எதிரான போராட்டம்!
"மஞ்சள் ஜாக்கெட்" என்னும் பிரான்ஸ் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமாகும் அச்சத்தில் வரும் சனிக்கிழமை அன்று "ஈஃபில் டவர்" இழுத்து மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டீசல் விலை உயர்வை எதிர்த்து நடந்து வரும் பிரான்ஸ் அரசுக்கு எதிரான போராட்டம் மேலும் தீவிரமடையும் என்று எதிர்ப்பார்க்கபடுகின்றது. ஆகவே மக்களின் பாதுகாப்பு கருதி பிரான்ஸ் முழுவதும் 89,000 காவல்துறையினர், ராணுவ வாகனங்கள் நிறுத்தப்படுவர் என்றும் அந்நாட்டு பிரதமர் எய்ட்வார் ஃபிலிப் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈஃபில் கோபுரம் இழுத்து மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று பாரிசில் மிக மோசமான வன்முறை நடைபெற்றது. மக்களின் வன்முறை போராட்டத்துக்கு காரணமான எரிபொருள் விலை உயர்வை திரும்ப பெறுவதற்கு பிரான்ஸ் அரசாங்கம் ஒப்புக்கொள்வதாக அறிவித்துவிட்டாலும், இதுபோன்ற மற்ற விவகாரங்களில் அரசாங்கத்தின் மீதுள்ள அதிருப்தியின் காரணமாக மக்களின் போராட்டம் தொடர்கிறது.
கடந்த வாரம் நடைபெற்ற போராட்டத்தின்போது பிரான்ஸின் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களில் ஒன்றான 'ஆர் டி ட்ரோம்ஃப்' சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.