பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை: மனைவி புகாரால் பரபரப்பு
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை; கடத்தப்பட்டு இருக்கலாம் என்று அவரது மனைவி போலீசில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
எனது சினிமா வாழ்க்கையில் எனக்கு போட்டியாக இருப்பவர் ரஜினிகாந்த் தான் என்று கூறி பிரபலமானவர் பவர் ஸ்டார். இதுபோன்று பேட்டிகள் கொடுத்தே மக்கள் மத்தியில் அவர் பிரபலமானார். இவர் பிரபலமடைந்ததை அடுத்து, இவருக்கு சினிமா வாய்ப்புகளும் குவியத் தொடங்கியது.
தமிழில் விஜய், விக்ரம் உள்பட பல முன்னணி ஹீரோக்களுடனும் பவர் ஸ்டார் நடித்துள்ளார். இவருக்கென ரசிகர்கள் வட்டாரமே உள்ளது.
இதற்கிடையே, இவர் பல நிறுவனங்களில் மோசடி செய்ததாகவும் பல முறை கைதாகியுள்ளார். இன்னமும் பவர் ஸ்டார் மீது சில வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை அண்ணாநகரில் மனைவி ஜூலியுடன் வசித்து வரும் பவர் ஸ்டாரை காணவில்லை என்று அவரது மனைவி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். மேலும், பவர் ஸ்டாரை சிலர் பணம் கேட்டு மிரட்டி வந்ததாகவும், இதனால் அவர்கள் கடத்தி இருக்கலாம் என்றும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, போலீசார் பவர் ஸ்டாரை தொடர்பு கொள்ள முயன்றபோது சொத்து விவகாரம் காரணமாக தற்போது ஊட்டியில் இருப்பதாகவும், வேலை முடிந்ததும் வீடு திரும்பிவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.