தலித் கட்சிகள் இணைந்து கூட்டணி வைக்க வேண்டும்- இயக்குநர் பா. ரஞ்சித் பேச்சுக்கு விசிக கடும் எதிர்ப்பு
தலித் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பா. ரஞ்சித், தலித் அமைப்புகளுக்கிடையே கூட்டணியை உருவாக்குவோம்.
குறைந்தது 7 லோக்சபா தனி தொகுதிகளில் உழைப்போம்.. ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு தலித் அமைப்பினரை தேர்ந்தெடுப்போம்.
பிற கட்சிகளில் உள்ள தலித் எம்.எல்.ஏக்கள் எம்.பிக்கள், அந்த கட்சிகளை தூக்கிப் போட்டு வந்தால் நாங்கள் அவர்களை வெற்றி பெற வைப்போம் என்றார்.
இதற்கு பதிலளித்துள்ள ரவிக்குமார், எஸ்சி கட்சிகள் சேர்ந்து சாதி அடிப்படையில் கூட்டணி அமைக்கவேண்டும் என்ற பேச்சு ஆபத்தானது. அது தலித்துகளுக்கு எதிரான திரட்சிக்கே வழிவகுக்கும்.
சாதிய அடையாளத்தை ஊக்குவிக்கவேண்டும் என்பது சனாதனவாதிகளின் ஆலோசனை. கடந்த காலத்தில் பாமகவை வைத்து செய்த சோதனையை இப்போது தலித் கட்சிகளை வைத்து செய்யப் பார்க்கிறார்களா? என கொந்தளித்திருக்கிறார்.