ஊழியர்களின் தொடரும் போராட்டம்.. என்ன செய்யப்போகிறது ஸ்விக்கி ?
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஸ்விக்கி ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆன்லைனில் ஆர்டர் செய்தால் பொருட்களை எப்படி வீடு தேடி வந்துக் கொடுக்கிறார்களோ அதேபோல், வீடு தேடி உணவு வழங்கும் ஆன்லைன் ஆப்களும் நிறையவே இருக்கிறது.
அப்படிப்பட்ட ஒரு பிரபல ஆப் தான் ஸ்விக்கி. இந்த ஆப் மூலம் ஏராளமான பிரபல ஓட்டல்கள், ரெஸ்டாரன்டுகளில் இருந்து உணவுகளை ஆர்டர் செய்தால் ஸ்விக்கி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு, 30 முதல் 45 நிமிடங்களுக்குள் கொண்டு வந்து சேர்ப்பார்கள்.
இந்த ஆப் மூலம் லட்சக்கணக்கான பேர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்தியளவில் மொத்தம் 45 நகரங்களில் 45 ஆயிரம் உணவகங்களுடன் ஸ்விக்கி இணைந்து செயல்படுகிறது. ஸ்விக்கியின் கீழ், டெலிவெரி பாய்ஸ் உள்பட ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்விக்கியில் வேலை செய்யும் டெலிவரி ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக திடீர் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊக்கத் தொகையை வெளிப்படையாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் இரவு நேரங்களில் போலீஸ் கெடுபிடிகள் குறித்து ஸ்விக்கி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த போராட்டம் தாம்பரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இன்றும் நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டது. டெலிவரி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆர்டர் செய்த உணவுகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.