வயதான தம்பதிகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் ஆந்திர தம்பதி - போலீசார் எச்சரிக்கை
ஆவடியில் தம்பதியை கொலை செய்துவிட்டு கொள்ளையடித்து தப்பி சென்ற ஆந்திர தம்பதி குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆவடி அய்யப்பன் நகரை சேர்ந்தவர் ஜெகதீசன் (65). இவரது மனைவி விலாசினி (58). இருவரும், அரசு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இவர்கள் ஆவடியில் தனியாக பண்ணை வீட்டில் வசித்து வந்தனர். கடந்த மாதம் 27- ந் தேதிஜெகதீசனும் அவரது மனைவி விலாசினியும் வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபர்கள் இருவரையும் கொடூரமாக கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்து நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பினர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர், இதன் முதற்கட்ட விசாரணையில் தம்பதியை கொலை செய்தது ஜெகதீசனின் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த ஆந்திராவை சேர்ந்த தம்பதி சுரேஷ் மற்றும் அவரது மனைவி பூவலட்சுமி ஆகியோர் என்பது தெரியவந்தது. அப்போது, சுரேஷ், பூவலட்சுமி மற்றும் அவர்களது மகன் ஆகியோர் தலைமறைவாகி இருந்தனர்.
கொலையாளிகளை பிடிக்க அம்பத்தூர் உதவி கமிஷனர் ஈஸ்வரன் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் ஆந்திரா சென்று விசாரணை நடத்தினர். சுரேஷ் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை என 30- க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
ஆந்திராவில் இருந்து தப்பிய சுரேஷ் மற்றும் பூவலட்சுமி சென்னைக்கு வந்து தன் மீதுள்ள வழக்குகளை மறைத்து ஜெகதீசனிடம் குடும்ப சூழலை தெரிவித்து வீட்டில் தங்கியபடி குடும்பத்துடன் வேலை பார்த்து வந்துள்ளான்.
ஜெகதீசன் வீட்டில் நகை, பணம் இருப்பதை தெரிந்துக் கொண்ட சுரேஷ் நேரம் பார்த்து தம்பதியை கொலை செய்துவிட்டு, கொள்ளையடித்துக் விட்டு குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளான் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, போலீசார் ஆந்திர தம்பதியின் புகைப்படத்தை தமிழகம் மற்று ஆந்திராவில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.சுரேஷ் , பூவலட்சுமி ஆகியோர் மகனுடன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் காட்சி ரயில்நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஹவுரா ரயிலின் மூலம் ஆந்திரா தப்பிச் சென்றுள்ளனர்.
வயதான தம்பதிகளை குறிவைத்து வீடு கேட்பது போல் வந்து அவர்களை கொலை செய்துவிட்டு நகை, பணத்தை கொள்ளையடிப்பதையே இவர்கள் தொழிலாக வைத்துள்ளனர். இந்த தம்பதியிடம் மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் இவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.