சபரீசன் ஆட்டம் தாங்க முடியலையே தளபதி - ஸ்டாலினிடமே புகைச்சலைக் காட்டும் சீனியர்கள்

ஸ்டாலின் மருமகனின் தலையீடுகளால் கழகத்தின் உள்கட்டமைப்பு சீர்குலைகிறது' எனப் பேசி வருகின்றனர் திமுக உடன்பிறப்புகள். பாராளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்கள் இருக்கும் நிலையில், சபரீசன் டீம் ஆட்டம் அதிகமாகிவிட்டது எனவும் பொருமுகின்றனர்.

முடியட்டும் விடியட்டும்' என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக மிகுந்த நம்பிக்கையோடு தேர்தலை எதிர்கொண்டார் ஸ்டாலின். தேமுதிகவும் இல்லாத நிலையில், 'ஸ்டாலினை முதல்வராக முன்னிறுத்தினால் வெற்றி கிடைக்காது' எனக் கருதிய கருணாநிதி, தானே முதல்வர் எனக் கூறினார்.

இந்தக் குழப்பங்களால் ஒரு சதவீத வாக்கு இடையில் ஜெயலலிதாவிடம் நாற்காலியைப் பறிகொடுத்ததது திமுக. இந்த அபாயத்தை முன்கூட்டியே உணர்த்தினார் சுப.வீரபாண்டியன்.

தேமுதிகவுக்காக இனியும் காத்திருக்க வேண்டாம், உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தினாலே வெற்றி பெறலாம்' எனப் பதிவிட்டார். அவரது வார்த்தைகளை தாமதமாகத்தான் புரிந்து கொண்டார் கருணாநிதி.

இந்தத் தோல்வி கொடுத்த கசப்பான அனுபவங்களை ஸ்டாலின் மறக்கவில்லை. அதே சமயத்தில் திமுகவின் மார்கெட்டிங் டீமின் வேலைகளை ஆர்வத்தோடு கவனித்தார்.

ஓ.எம்.ஜி எனப்படும் இந்த அணிதான், இப்போது ஐ.டி விங்காக மாறியிருக்கிறது. இந்த டீமின் உறுப்பினர்கள் இப்போதும் படு சுறுசுறுப்பாக ஸ்டாலினுக்காக வேலை பார்க்கிறார்கள்.

எடியூரப்பாவுக்கு முன்கூட்டியே வாழ்த்து சொன்னது, கஜா புயலுக்காக எடப்பாடியை பாராட்டியது உள்ளிட்டவை இந்த அணியின் சறுக்கல்கள். இவர்களுக்கான சம்பளப் பரிவர்த்தனைகளை எ.வ.வேலு கவனித்து வருகிறார் என்ற பேச்சும் உண்டு.

இந்த டீமின் தலைவராக இருக்கிறார் சபரீசன். ஒட்டுமொத்த கழகத்தையும் இவர்தான் ஆட்டிப் படைத்து வருகிறார். இவரால் ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி ஸ்டாலினிடம் பேச முடியவில்லை. சபரீசனை ஓரம்கட்டினால்தான் கட்சி உருப்படும் என வெளிப்படையாகப் பேசத் தொடங்கிவிட்டனர். மாவட்டங்களில் யாருக்கு பொறுப்பு? யாரை ஒதுக்க வேண்டும், ஐ.டி விங்க் பொறுப்புக்கு யார் வர வேண்டும், சீனியர்களை யாரை விரட்ட வேண்டும் என்பதையெல்லாம் சபரீசன்தான் முடிவு செய்கிறார். இந்தக் கட்சி காணாமல் போவதற்கு அவர் மட்டுமே பொறுப்பாக இருப்பார்' என வேதனையை அள்ளி வீசுகின்றனர்.

- அருள் திலீபன்

More News >>