தொழில் போட்டியால் விபரீதம்: விஷம் கலந்த மது குடித்த இருவர் பலி - 8 பேர் கைது
திண்டுக்கல்லில் மது குடித்து இருவர் பலியான சம்பவத்தில், தொழில் தொழில் போட்டி காரணமாக கொலை செய்தது தெரியவந்தது.
திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டி என்ற இடத்தில் அதிகாலையிலேயே சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு, விற்பனையாகும் மதுவை குடித்த சமையன் மற்றும் முருகன் ஆகியோர் நேற்று சம்பவ இடத்திலேயே உயிழந்தனர். மேலும், தங்க பாண்டியன் என்பவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கினர். ஒரே இடத்தில் மது வாங்கி குடித்த இரண்டு பேரும் உயிரிழந்ததால், சந்தேகித்த போலீசார் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த ஜெயச்சந்திரனிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, ஜெயசந்திரன் டாஸ்மாக் மேற்பார்வையாளர் ராஜலிங்கம் மூலம் மது வாங்கி, சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனைக்கு செய்து வந்துள்ளார். இதன்மூலம், ராஜலிங்கத்திற்கும் பணத்தில் பங்கு கிடைத்து வந்துள்ளது.
இதேபோல், ஜெயசந்திரன் மற்றொரு டாஸ்மாக் கடையில் இருந்தும் மது வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை வந்துள்ளார். இதுகுறித்து ராஜலிங்கத்திற்கு தெரியவந்ததை அடுத்து, இவருக்கும் ஜெயச்சந்திரனுக்கும் இடையே தொழில் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ராஜலிங்கம் டாஸ்மாக் ஊழியரான கிருஷ்ணமூர்த்தியின் மூலம் பழி வாங்க திட்டம் தீட்டி உள்ளார். அதன்படி, கிருஷ்ணமூர்த்தி ஜெயச்சந்திரனுக்கு தெரியாமல் அவருக்கு வழங்கப்படும் மது பாட்டில் இருந்து 5 பாட்டில்களில் ஊசி மூலம் விஷ மருந்து செலுத்திவிட்டு கொடுத்துள்ளார்.இந்த விஷம் கலந்த மதுவை குடித்த மூன்று பேரில் இருவர் உயிரிழந்துவிட்டனர். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது விசாரணையின் மூலம் தெரியவந்தது.
மேலும், மீதமுள்ள இரண்டு விஷ பாட்டில்களை யார் வாங்கி சென்றது என்று தெரியாமல் போலீசார் குழம்பிபோய் உள்ளனர். மேலும், சட்டவிரோதமாக வாங்கிய மது பாட்டிலோ அல்லது கீழே கிடக்கும் மது பாட்டிலையோ யாரும் எடுத்து குடிக்க வேண்டாம் என்று போலீசார் வீதி வீதியாக சென்று எச்சரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, மது பாட்டில்களில் விஷம் கலந்த கிருஷ்ணமூர்த்தி, ராஜலிங்கம் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.