எடப்பாடி அரசால் நமக்குத்தான் கெட்ட பெயர்! -மோடியிடம் போட்டுக் கொடுத்த தமிழிசை

ஆளும்கட்சியான அதிமுகவுக்கு எதிராக டெல்லியில் சில விஷயங்களைத் தெரிவித்திருக்கிறாராம் தமிழிசை. அதனால்தான், கூட்டணி தொடர்பான விஷயங்களில் எந்தப் பதிலையும் கூறாமல் எடப்பாடி பழனிசாமியை இழுத்தடித்து வருகிறதாம் டெல்லி.

தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட மாவட்டங்கள் அனைத்தும் கஜா புயலால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. இந்த மாவட்டங்களின் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 15,000 கோடி ரூபாய் அளவுக்குத் தேவைப்படுகிறது எனக் கூறி, பிரதம மந்திரி நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார் தமிழக முதல்வர்.

மத்திய நிபுணர் குழுவை அனுப்பி வைக்கிறேன் எனக் கூறிய பிரதமர், இப்போது வரையில் 500 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே ஒதுக்கியிருக்கிறார். இதனால் போதிய ஃபண்டு இல்லாமல் அரசு கஜானாவில் இருந்து செலவு செய்து வருகிறது தமிழ்நாடு அரசு.

இதற்கு முந்தைய காலங்களில் இல்லாத அளவுக்கு மோடியின் பாராமுகம், எடப்பாடி அண்ட் கோவுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது. இதைப் பற்றி தமிழக பாஜக பொறுப்பாளர்களிடம் விசாரித்துள்ளனர்.

இதற்குப் பதில் அளித்த அவர்கள், தமிழக அரசின் செயல்பாடுகளைப் பற்றி பிரதமர் அலுவலகம் தொடர்ந்து கவனித்து வருகிறது. இந்த அரசுக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவுக்கு வரவேற்பு இல்லை என்பதை அறிந்து வைத்துள்ளனர்.

தவிர, ‘இந்த அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டிருப்பதும் இவர்களைப் காப்பாற்றுவது நீங்கள்தான் என பிரதமர் மீதும் மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்’ என பிரதமர் அலுவலகத்துக்குத் தகவல் கொடுத்திருக்கிறார் தமிழிசை. ஆதலால், வரக் கூடிய பாராளுமன்றத் தேர்தலில் இவர்களோடு அணி சேருவதைவிட மற்ற யாரெல்லாம் வருவார்கள் என பிஜேபி ஆலோசித்து வருகிறது’ எனத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், ஆளும்கட்சி நிர்வாகிகளிடம் இதுபற்றிப் பேசினால், ‘ பிஜேபி இல்லாமல் தனித்துக் களம் கண்டால், பத்துக்கும் மேற்பட்ட இடங்களை வெல்ல முடியும். அம்மா காப்பாற்றி வைத்திருந்த சிறுபான்மையினர் வாக்குகளும் எங்களுக்கு வந்து சேரும். தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் பிஜேபிதான் ஆட்சிக்கு வரும். அப்போது எங்கள் எம்பிக்கள் அனைவரும் உங்களை ஆதரிப்பார்கள் என பிஜேபி தலைவர்களிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.

நம்மைக் கழட்டிவிடத்தான் இப்படியெல்லாம் செய்கிறார்கள் என பிஜேபிகாரர்கள் நினைக்கிறார்களாம். அதனால்தான் விஜயபாஸ்கர் உதவியாளர் சரவணனினிடம் குட்கா விசாரணையைத் தொடங்கினார்கள் எனவும் சொல்கிறார்கள். அடுத்தடுத்த ரெய்டுகள் நடந்தால், எடப்பாடி பழனிசாமி மீது பிரதமருக்கு என்ன மாதிரியான அக்கறை என்பது தெரிந்துவிடும்’ என்கிறார்கள்.

- அருள் திலீபன்

More News >>