தினகரனிடம் இருந்து செந்தில் பாலாஜி எஸ்கேப்- திமுகவின் அரவக்குறிச்சி வேட்பாளராகிறார்!
அரவக்குறிச்சி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கிறார் தினகரன் தீவிர விசுவாசி செந்தில் பாலாஜி. ஸ்டாலின் முன்னிலையில் விரைவில் செந்தில் பாலாஜி ஐக்கியமாகிறார் என்கின்றன கரூர் திமுக வட்டாரங்கள்.
தினகரன் கோஷ்டியில் படுதீவிரமாக இயங்கியவர் செந்தில் பாலாஜி. அத்துடன் தினகரன் கோஷ்டிக்கான செலவுகளையும் செந்தில் பாலாஜி பார்த்துக் கொண்டார்.
அதேநேரத்தில் தினகரனிடம் இருந்து சல்லிக்காசும் செந்தில் பாலாஜிக்கு வரவில்லை. இதனால் வெறுத்துப் போய் விரக்தியடைந்துவிட்டாராம்.
இந்த நிலையில் தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என செந்தில் பாலாஜி விரும்பியிருக்கிறார். அதற்கும் தினகரன் பிடி கொடுக்கவில்லையாம்.
அத்துடன் தகுதி நீக்க வழக்கு செலவை பார்த்து கொள்வதாக கூறியிருந்தார் தினகரன். அந்த விவகாரத்திலும் ஒரு பைசாவை கூட தினகரன் செலவு செய்யவில்லை.
இதனால் தினகரனிடம் இருந்து விலக தொடங்கிய செந்தில் பாலாஜி ஒரு கட்டத்தில் போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார். இது தினகரன் முகாமை அதிர்ச்சி அடைய செய்தது.
செந்தில் பாலாஜியை தொடர்பு கொள்ள எவ்வளவோ முயன்றும் தினகரன் தரப்பால் முடியவில்லை. சில நாட்களுக்கு முன்னர் கூட நேரில் ஆட்களை அனுப்பி சமாதானம் பேசி பார்த்திருக்கிறார் தினகரன்.
ஆனாலும் செந்தில் பாலாஜி இறங்கிவரவில்லையாம். அப்போதுதான், நீங்க சின்னம்மா திமுகவுடன் கூட்டணிக்கு போகலாம்னு யோசிப்பது டிடிவிக்கும் தெரியும்... அதனால நான் வேற முடிவு எடுத்துட்டேன் என கூறியிருக்கிறார்.
அதாவது விரைவில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய இருக்கிறாராம் செந்தில் பாலாஜி. அப்படி செந்தில் பாலாஜி இணைந்தால் அவரே திமுகவின் அரவக்குறிச்சி வேட்பாளர் என்கிற உறுதி மொழியும் தரப்பட்டுள்ளதாம். இதுதான் கரூர் அரசியல் வட்டாரங்களில் ஹாட் டாபிக்.
-எழில் பிரதீபன்