பா.ரஞ்சித்துக்கு ஒன்றும் தெரியாது- எச்.ராஜா பாய்ச்சல்

'அட்டக்கத்தி ' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித் அரசியல் கருத்துகளை வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளார். இதுகுறித்து பாஜக செயலர் 'எச்.ராஜா,ரஞ்சித்திற்கு ஒன்றும் தெரியாது' என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது அரசியல் நோக்கர்களிடையே பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

மெட்ராஸ், காலா, கபாலி போன்ற படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். இவர் சமீப காலமாக அரசியல் கருத்துக்களை மேடைகளில் பேசி வருகிறார். தலித்தியம் பேசும் அரசியலில் தன்னை இணைத்து கொண்டு அதன் அடிப்படையில் அவர் படங்களும் இயக்கி வருகிறார்.

சமீபத்தில் தலித் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து தேர்தலில் போட்டியிடலாம் என அவர் வெளியிட்ட கருத்து அரசியல் நோக்கர்களை சற்றே முணுமுணுக்க வைத்தது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அரசியலை சாதிரீதியாக கையாளமுடியாது, ஜனநாயக முறையில் தான் செயல்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில், ரஞ்சித் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் "தன் வாழ்நாள் முழுவதும் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக செயல்பட்டவர் அம்பேத்கர். பாஜக அம்பேத்கரை சொந்தம் கொண்டாட முடியாது" எனக் கூறியிருந்தார்.

இதற்கு பதிலடியாக பாஜக தேசிய செயலர் எச்.ராஜா "இவருக்கு ஆர்.எஸ்.எஸ் ஸும் தெரியாது. அம்பேத்கர் அவர்களையும் தெரியாது. பாவம் மக்கள்" என ட்வீட் செய்துள்ளார்.  எச். ராஜாவின் கருத்துக்கு ட்விட்டரில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. 

More News >>