ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட உடுமலை கெளசல்யா மறுமணம்
உடுமலைப்பேட்டையில் ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட கெளசல்யாவுக்கு இன்று கோவையில் மறுமணம் நடைபெற்றது.
ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் கெளசல்யாவின் கணவர் சங்கர் 2016-ம் ஆண்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் கெளசல்யாவின் பெற்றோர், உறவினர்களால் சங்கர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இதில் கவுசல்யா தந்தை சின்னசாமி உள்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இத்தாக்குதலில் கெளசல்யா படுகாயங்களுடன் உயிர் தப்பினார். பின்னர் பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய அமைப்புகளுடன் இணைந்து ஜாதி ஒழிப்பு பிரசாரங்களை முன்னெடுத்து வந்தார் கெளசல்யா.
இந்நிலையில் கெளசல்யாவுக்கும் கோவை நிமிர்வு என்ற பறை இசைக்கான கலையகத்தை நடத்தி வரும் பறை இசைக் கலைஞர் சக்திக்கும் இடையே இன்று கோவையில் மறுமணம் நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன் தலைமையில் இந்த திருமணம் நடைபெற்றது.
படுகொலை செய்யப்பட்ட சங்கரின் பாட்டி மாலைகளை எடுத்துக் கொடுத்தார். சங்கரின் உறவினர்கள் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, எவிடென்ஸ் அமைப்பின் நிர்வாகி கதிர் உள்ளிட்ட பலர் இத்திருமண நிகழ்வில் பங்கேற்றனர்.