மறைத்து வைத்த செல்போன் சிக்கியதால் பள்ளி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை!
சிவகங்கை மாவட்டம் மெட்ரிக் பள்ளியில் மறைத்து வைத்த செல்போன் பிடிபட்டதால் மாணவி ஒருவர் பள்ளிக்கூட கட்டடத்தின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தார் மாணவி சுவேதா. இவர் பள்ளியின் தடையை மீறி செல்போன் வைத்திருந்ததால் ஆசிரியர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சுவேதாவின் பெற்றோரை வரவழைத்தனர். ஆசிரியர்கள் சுவேதாவின் பெற்றோரிடம் புகார் கூறுகையில் திடீரென்று சுவேதா பள்ளியின் இரண்டாவது தளத்திலிருந்து கீழே குதித்தார். இதை கண்ட ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சுவேதாவை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.