டெல்லியில் சோனியாவுடன் ஸ்டாலின் சந்திப்பு- கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு அழைப்பு!

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இன்று சந்தித்தார். இச்சந்திப்பின் போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சோனியாவுக்கு அழைப்பு விடுத்தார் ஸ்டாலின்.

கருணாநிதியின் சிலை திறப்பு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 16-ந்தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கருணாநிதியின் சிலையை சோனியா காந்தி திறந்து வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இவ்விழாவுக்கான அழைப்பிதழை சோனியா காந்தியிடம் வழங்க ஸ்டாலின் இன்று காலை டெல்லி சென்றார். டெல்லி விமான நிலையத்தில் திமுக மூத்த தலைவர்கள் ஸ்டாலினை வரவேற்றனர்.

பின்னர் சோனியா வீட்டுக்கு ஸ்டாலின் சென்றார். இன்று சோனியாவின் பிறந்த நாள் என்பதால் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.

மேலும் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை சோனியாவிடம் வழங்கி விழாவில் பங்கேற்குமாறும் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அதை சோனியா காந்தி ஏற்றுக் கொண்டார். டெல்லியில் நாளை நடைபெற உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் குறித்து இருவரும் விவாதித்தனர்.

More News >>