போன் ஒட்டுக் கேட்கப்படுகிறதா? டிராயிடம் தனி நபரும் தகவல் கோரலாம்!

தொலைபேசி உரையாடல்கள் கண்காணிக்கப்படுகிறதா என்பது குறித்து குடிமகன் ஒருவர் தகவல் கோரினால் அதை அளிக்க வேண்டிய கடமை தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு (Telecom Regulatory Authority of India) உள்ளது என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கபிர் சங்கர் போஸ் என்ற வழக்குரைஞர், தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுகிறதா என்று தகவல் அறியும் உரிமை சட்டம் (Right to Information Act) மூலம் விளக்கம் கேட்டிருந்தார்.

தொடர்புடைய வோடபோன் இந்தியா நிறுவனம், தாங்கள் தனியார் நிறுவனம் என்பதால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தாங்கள் தகவல்களை அளிக்க விலக்கு கோரியிருந்ததுடன், இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய்தான் இந்தியாவில் தொலைதொடர்புகளை ஒழுங்குபடுத்துகிறது என்றும் தெரிவித்திருந்தது.

வழக்குரைஞர் போஸ் கேட்டிருந்த தகவல்களை கொடுக்குமாறு மத்திய தகவல் ஆணையம் (CIC), டிராயை கடந்த செப்டம்பர் மாதம் கேட்டுக்கொண்டிருந்தது. டிராய், தனியார் நிறுவனங்களிடமிருந்து தகவல்களை கேட்டுப் பெற தனக்கு அதிகாரம் இல்லையென்று கூறியிருந்ததுடன்,போஸ் கேட்டிருக்கும் தகவல்கள் ஆவணப்படுத்தப்படவில்லையென்றும், அதுபோன்ற கிடைக்காத தகவல்களை பெற்று வழங்குவது தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி தங்கள் கடமையென்று கூறப்படவில்லையென்றும் தெரிவித்திருந்தது.

"ஒரு தனியார் நிறுவனத்தின் தகவல்களை கையாளும் உரிமை வேறு ஏதாவது சட்டத்தின்படி ஒரு பொது அதிகார அமைப்புக்கு இருக்குமானால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரிவு 22(எஃப்) படி குறிக்கப்படும் 'தகவல்' அதுவேயாகும். ஆகவே, தனியார் நிறுவனத்திடம் தகவலை பெற்று விண்ணப்பதாரருக்கு அளிக்க வேண்டிய கடமை பொது அதிகார அமைப்புக்கு உள்ளது" என்று கூறியுள்ள டெல்லி உயர்நீதிமன்றம், "தொலைபேசி அழைப்புகள் எந்த ஒரு முகமையாலும் கண்காணிக்கப்படுவது குறித்ததான தகவலை தொலைபேசி நிறுவனங்களிடமிருந்து பெறக்கூடிய சட்டப்படியான அதிகாரம் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு இருப்பதால், அதை பற்றி தகவல் கோரும் எந்த ஒரு விண்ணப்பதாரருக்கும் அதை அளிக்க வேண்டிய உரிமை ஆணையத்திற்கு இருக்கிறது," என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

More News >>