காணாமல் போன வைர வியாபாரி மர்மமான முறையில் மரணம்- நடிகை கைது!

மும்பை வைர வியாபாரி ராஜேஷ்வர் உதானி ராய்கட் மாவட்டத்தில் உள்ள ஒரு காட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தொலைக்காட்சி நடிகை டிவோலினா பாட்டசார்ஜி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 28ம் தேதி முதல் மும்பை வைர வியாபாரி ராஜேஷ்வர் உதானியை காணவில்லை என்று அவரது குடும்பத்தார் போலீஸில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் அவரின் உடல் ராய்காட் மாவட்டத்தின் பன்வெல் பகுதியில் உள்ள ஒரு காட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அறிந்த அவரது குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக இந்தி நாடக நடிகை டிவோலினா பட்டாசார்ஜியை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர் "சாத் நிபனா சாத்தியா" என்ற பிரபல இந்தி நாடகத்தில் நடித்து வருகிறார்.

 

ஆனால், இந்த சம்பவத்திற்கும் நடிகை டிவோலினாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொழுதுபோக்கு துறையில் உதானிக்கு பல பெண்களிடம் தொடர்பு இருந்ததாக விசாரணையில் கூறப்படுகிறது.

ஆகவே, இந்த வழக்கு குறித்து இன்னும் பல பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

உதானி மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் அவரை யாரோ கடத்தி கொலை செய்துவிட்டு உடலை பன்வெல் காட்டில் புதைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள் என போலீஸ் தரப்பில் சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பான விடையும் மேற்கட்ட விசாரணையில் தெரிய வரும் எனக் கூறப்படுகிறது.

More News >>