ஒரே ராக்கெட்டில் 31 செயற்கைக் கோள்களை ஏவுகிறது இந்தியா!

இந்திய விண்வெளிக் கழகமான இஸ்ரோ இன்று ஒரே ராக்கெட்டில் 33 செயற்கைக் கோள்களை ஏவி சாதனை படைக்கிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (இஸ்ரோ), பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்கள் மூலம் பல்வேறு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்து வருகிறது. உள்நாட்டு செயற்கைக்கோள்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் வணிகரீதியாக விண்ணில் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் தற்போது புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ‘கார்டோ சாட்-2’ உட்பட 31 செயற்கைக் கோள்களை ‘பிஎஸ்எல்வி சி-40’ ராக்கெட் மூலம் வெள்ளிக்கிழமையன்று (ஜன. 12) காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவுகிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாம் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 31 செயற்கைக்கோள்களில் ஒரு மைக்ரோ, ஒரு நானோ மற்றும் ஒரு‘கார்டோசாட்-2’ என இந்தியாவுக்கு சொந்தமான 3 செயற்கைக்கோள்களும், 3 மைக்ரோ,25 நானோ என அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பின்லாந்து, பிரான்ஸ், கொரியா ஆகிய 6 நாடுகளுக்கு சொந்தமான 28 செயற்கைக்கோள்களும் அடங்கும்.

இந்தியா ஏவும் ‘கார்டோசாட்-2’செயற்கைக்கோள், அதிநவீன சென்சார் தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடியதாகும். புவியின் மேற்பரப்பை மிக துல்லியமாக படமெடுக்கும் திறன் கொண்டதாகும்.

இந்த செயற்கைக்கோள் அனுப்பும் படங்கள் வரைப்பட தயாரிப்பு, நில அளவீடு போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். 710 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைக்கோள் புவியின் கீழ் வட்டப் பாதையில் சுற்றி வரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

More News >>