அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு இடி கொடுத்த இந்தியா!
அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுலா சென்றுள்ள இந்திய அணியால், டி20 தொடரை மோசமான வானிலை மற்றும் மழையின் குறுக்கீட்டால் சமன் மட்டுமே செய்ய முடிந்தது.
அதனை தொடர்ந்து, அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால், புஜாராவை தவிர வேறு யாரும் சிறப்பாக ஆடததால், 250 ரன்களுக்கே இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அடுத்ததாக எளிதான இலக்கை சேஸ் செய்ய முயன்ற ஆஸ்திரேலிய வீரர்களின் கனவை இந்திய பவுலர்களான அஸ்வின் மற்றும் பும்ரா தகர்த்தெறிந்தனர்.
முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸி., அணியால் வெறும் 235 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணியில் மீண்டும் புஜாரா 71 ரன்களை குவித்தார். மேலும், அஜின்கியா ரஹானே 70 ரன்கள் விளாசினார். முதல் இன்னிங்ஸில் 3 ரன்களில் ஆட்டமிழந்த கோலி, இரண்டாம் இன்னிங்ஸில் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பேட்ஸ்மேன்களின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 10 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்தது.
இந்த ஸ்கோரை சேஸ் செய்ய போராடிய ஆஸி., அணி 291 ரன்கள் எடுத்த நிலையில், ஆல் அவுட் ஆகி முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஆஸ்திரேலிய அணி சார்பில் ஷான் மார்ஷ் அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்து வெற்றிக்கு வழிவகுக்க முடியாமல் இந்திய அணியின் பவுலிங்கில் சுருண்டனர்.
இந்திய அணி சார்பில், பும்ரா, அஸ்வின், முகமது ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை முறையே கைப்பற்றி ஆஸி.,யின் ஆதிக்கத்துக்கு பேரிடி கொடுத்தனர்.