அறுந்து கிடந்த மின் கம்பியை அகற்றியபோது பரிதாபம்: இருவர் பலி
புதுக்கோட்டை அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை அகற்றியபோது மின்சாரம் பாய்ந்து பெண் உள்பட இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் புதுக்கோட்டையும் ஒன்று. இங்கு, மரங்கள், மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. இதனால், புதுக்கோட்டையில் இன்னமும் பல இடங்களில் மின்சாரம் விநியோகம் செய்யப்படவில்லை.
மின்சார கம்பங்களை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 95 சதவீதம் அளவுக்கு சீரமைப்பு பணிகள் முடிந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரையப்பட்டியை சேர்ந்த முத்துச்சாமி. இவரது மனைவி சுசீலா (50). இவரும், அதே பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் சக்தி (25) ஆகியோரும் இன்று காலை அப்பகுதியில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்காக நடந்து சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, வழியில் மின்சார வயர் கிடந்ததால் அதை அப்புறப்படுத்த முயன்றபோது திடீரென மின்சாரம் பாய்ந்தது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அறுந்த வயர்களில் மின்சாரம் பாய்ந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, 95 சதவீதம் மின் கம்பங்கள் சீரமைப்பு பணி நடைபெற்றுள்ளதால் மின் சப்ளை செய்யப்பட்டுள்ளது என்றும் இதன் மூலம் மின்சாரம் பாய்ந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், கடந்த 25 நாட்களாக மின் வயர்கள் வழியிலேயே இருந்ததாவும், மக்கள் வந்து செலும்போதெல்லாம் அதனை அப்புறப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு மின்வாரிய அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். அப்போது, அங்கு ஒன்றிணைந்த பொது மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.