திமுக அணியில் இருந்து திருமாவளவனுக்கு கல்தா - ராகுல் சிக்னல் - Exclusive

தலித்துகளை வைகோ சிறுமைப்படுத்தி விட்டதாக வன்னியரசு கொதிக்க, ' தேர்தல் செலவிற்காக நாங்கள் வைகோவிடம் பணம் பெற்றது உண்மைதான். வன்னியரசு தனது பதிவை நீக்கிவிட்டார். அவரது கருத்துக்கு எதிர்கருத்தாக, தேர்தலுக்கு பணம் அளித்ததை ஏன் வைகோ கூறினார் என்பது புரியவில்லை.

அவருக்கு வன்னியரசு மீது கோபமா? என் மீது கோபமா? ஒருவரை விமர்சனம் செய்ய வேண்டுமானால், நேருக்கு நேர் துணிச்சலுடன் பேசுபவன் நான். யாரையும் தூண்டிவிட்டு விமர்சனம் செய்ய வைக்கும் அற்ப புத்தி எனக்கு கிடையாது' என பாய்ந்திருக்கிறார் திருமாவளவன்.

இவர்கள் இருவரையும் கூட்டணிக்குள் வைத்திருக்க வேண்டுமா என்ற கேள்வி திமுகவினர் மத்தியில் எழுந்திருக்கிறது.

பாராளுமன்றத் தேர்தல் நெருங்குவதற்குள் தேவையற்ற கட்சிகளை திமுக அணியில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்பதில் சிலர் முனைப்பாகச் செயல்படுகின்றனர்.

தேவையில்லாத கட்சிகள் என அவர்கள் சொல்வது விசிகவையும் மதிமுகவையும்தான். இதைப் பற்றி ஸ்டாலினிடம் பேசிய திமுக பிரமுகர் ஒருவர், ' இவர்கள் இருவரால் எந்த நன்மைகளும் கிடையாது. நமக்கு வரக்கூடிய வாக்குகளும் சிதறிப் போகும்.

வடக்கில் வன்னியர்கள் வாக்குகள் வேண்டும் என்றால், விசிக இல்லாமல் இருப்பதே நல்லது. இவர்கள் வரக் கூடிய வாக்குகளும் வந்து சேராது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மூன்று தனித் தொகுதிகளோடு ஒரு பொதுத்தொகுதி வேண்டும் என்றார் திருமாவளவன்.

அவருக்கு ஒரு தொகுதியே அதிகம் என துரைமுருகன் கிண்டலடித்தார். உடனே அண்ணா அறிவாலயத்துக்குத் தொண்டர்களை அனுப்பி வைத்து தீக்குளிப்பு முயற்சிகளை நடத்தினார்.

இதனால் எரிச்சலான கருணாநிதி, திருவள்ளூர் தொகுதியை சேர்த்துக் கொடுத்தார். அங்கு போட்டியிட்ட ரவிக்குமாருக்கு நமது கட்சி வாக்குகள் கை கொடுத்தும் தோற்றார்கள். இப்படி தோற்பார்கள் எனத் தெரிந்தே ஒரு தொகுதியை தாரை வார்த்தோம்.

இப்போது மீண்டும் அதே 3 தனித்தொகுதி, ஒரு பொதுத் தொகுதி எனக் கோஷம் போட வருவார்கள். அவர்களுடைய செல்வாக்கை உணராமல் பேசுகிறார்கள்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நேற்று டெல்லியில் நடந்த சோனியா காந்தி சந்திப்பில் திருமாவளவன் பற்றி எதுவும் பேசப்படவில்லை.

தேர்தல் நெருங்கி வரும்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் இருக்காது. அவர்கள் நடத்தப் போகும் தேசம் காப்போம் மாநாட்டில் யார் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்களோ, அதைப் பொறுத்தே திமுக அணியில் வி.சி.க அங்கம் வகிக்குமா என்பது தெரிய வரும் என அரசியல் வட்டாரத்தில் பேசத் தொடங்கியுள்ளனர்.

- அருள் திலீபன்

More News >>