பண மோசடியால் பவர் ஸ்டார் சீனிவாசன் கடத்தல்: மனைவி மீட்பு-7 பேர் கைது

வாங்கிய பணத்தை திரும்ப தராததால், பவர் ஸ்டார் மற்றும் அவரது மனைவியை கடத்திய கும்பலை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழில் லத்திகா உள்ளிட்ட படங்கள் மூலம் ஹீரோவான பவர் ஸ்டார் சீனிவாசன், பின்னர், முன்னணி ஹீரோக்களுடன் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 6ம் தேதி தனது கணவரை கடத்திவிட்டதாக அவரது மனைவி ஜூலி அண்ணாநகர் போலீசில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், நிலம் பதிவு செய்வது தொடர்பாக தான் ஊட்டிக்கு வந்ததாக பவர் ஸ்டார் தெரிவித்தார். மேலும், தான் இரண்டு நாட்களில் வீடு திரும்பிவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மேற்கொண்டு நடத்திய விசாரணையில் புகார் தெரிவித்த பவர் ஸ்டாரின் மனைவி ஜூலியும் ஊட்டிக்கு சென்றது போலீசாருக்கு தெரியவந்தது.

இந்நிலையில், இன்று சென்னை திரும்பிய பவர் ஸ்டார் சீனிவாசன், தன்னை கடத்திவிட்டதாகவும், மனைவி ஜூலியை அவர்கள் பிணை கைதியாக வைத்துள்ளதாகவும் கோயம்பேடு போலீசில் புகார் தெரிவித்தார்.

பவர் ஸ்டார் சீனிவாசன் இதுகுறித்து மேற்கொண்டு கூறியதாவது: கடந்த 3ம் தேதி சினிமா பிஆர்ஓ ப்ரீத்தி ஒரு படத்திற்கு 10 நாட்கள் கால்ஷீட் ரூ.10 லட்சம் அட்வான்ஸ் தருவதாகவும், இதுகுறித்து பேச கோயம்பேட்டில் உள்ள தனியார் ஓட்டலுக்கு தயாரிப்பாளர் அழைத்துள்ளார் என்றும் கூறினார். இதை நம்பி, கோவையில் இருந்து சென்னை வந்தேன். ப்ரீத்தியை ஒரு ஓட்டல் அறையில் சந்தித்தேன். சிறிது நேரத்தில் தயாரிப்பாளர் செல்வின் வந்தார். அவருடன் ஸ்டன்ட் யூனியனை சேர்ந்த ஒருவர் வந்தார்.

இவர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது மற்றொரு 7 பேர் வந்தனர். வக்கீல் என்று கூறியநிலையில், அவர்கள் இரண்டு செல்போன்களையும் பறித்தனர். பின்னர் என்னை தரையில் அமர வைத்து அநாகரீகமாக நடந்துக் கொண்டனர்.

அப்போது, நீங்கள யார் ? என்ன வேண்டும என்று கேட்டதற்கு ஆலம் யார் என்று தெரியுமா என கேட்டனர். தெரியும், அவருக்கு நான் 90 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். அதற்கான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது என்று கூறினேன்.

ஆனால், அந்த பணத்தை உடனே தர வேண்டும் என்று மிரட்டினர். இதனால், ஊட்டியில் இருக்கும் வீட்டை எழுதி தருவதாக கூறினேன். பின்னர், தன்னை செங்கல்பட்டுக்கு அழைத்து சென்று பின்னர் அண்ணா நகர் அழைத்து வந்து ஊட்டிக்கு அழைத்து சென்றுவிட்டனர்.

என் மனைவியின் பெயரில் உள்ள வீடு என்பதால் அவளது கையெழுத்து வேண்டும் என கூறினேன். இதனால், கடந்த 6ம் தேதி எனது மனைவி ஜூலியையும் ஊட்டிக்கு வரவழைத்தனர். இதற்கிடையே தான் ஜூலி போலீசில் புகார் தெரிவித்தார்.

இந்நிலையில், ஊட்டிக்கு வந்த ஜூலியையும் பிடித்து வைத்தனர். இதன்பிறகு, தனது குழந்தைகள் தனியாக இருப்பதாகவும், அவர்களை பார்த்துவிட்டு உடனே திரும்பிவிடுவதாகவும் கூறி அவர்கள் வழங்கிய காகிதங்களில் கையெழுத்திட்டு சென்னை வந்து முதல்வேலையாக போலீசில் புகார் தெரிவித்தேன். பிணை கைதியாக உள்ள தனது மனைவியை மீட்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் உடனடியாக ஊட்டிக்கு விரைந்து ஜூலியை மீட்டனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

More News >>