கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு வரும் சோனியாவுக்கு நாம் ஏன் வரவேற்பு கொடுக்கனும்? தமிழக காங். போர்க்கொடி!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு வருகை தரும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவுக்கு நாம் ஏன் வரவேற்பு கொடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியில் போர்க்கொடி தூக்கியுள்ளனர் சென்னை மாவட்ட நிர்வாகிகள்.
கருணாநிதி, அண்ணா சிலைகள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 16-ந் தேதி திறக்கப்பட உள்ளன. இவ்விழாவில் சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
சென்னை வருகை தரும் சோனியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு தர வேண்டும் என்ற எண்ணத்தில் சத்தியமூர்த்தி பவனில் சென்னை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை திருநாவுக்கரசர் நேற்று நடத்தினார். இதில், சோனியாவை வரவேற்று எப்படி பேனர்கள் வைப்பது என்பது தொடர்பாக திருநாவுக்கரசர் ஆலோசனை வழங்கினார்.
அப்போது, திமுக நடத்தும் நிகழ்ச்சிக்காக சோனியா காந்தி வருகை தருகிறார். அவர் சத்தியமூர்த்தி பவனுக்கு வருகிறாரா இல்லையா என்பது தெரியாது.
அப்படி இருக்கும்போது நாம் ஏன் செலவு செய்து பேனர்கள் வைக்கனும்? யாரிடம் காசு இருக்கிறது? சத்தியமூர்த்தி பவனுக்கு சோனியா காந்தி வருவதாக இருந்தால் அமர்க்களப்படுத்தலாம் என கலகக் குரல் வெடித்திருக்கிறது.
இதனால் அப்செட்டான திருநாவுக்கரசர், என்னதான் இருந்தாலும் அவருக்கு வரவேற்பு கொடுத்தே ஆகனும் என அடம்பிடித்திருக்கிறார். ஆனாலும் சென்னை மாவட்ட நிர்வாகிகள் இதை விரும்பாமல் புலம்பியபடியே வெளியேறினராம்.
- எழில் பிரதீபன்