பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர் சுர்ஜித் பல்லா திடீர் ராஜினாமா!
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்த நிலையில் பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினரான சுர்ஜித் பல்லாவும் பதவி விலகி உள்ளார்.
மத்திய பாஜக அரசின் பொருளாதார கொள்கைகள் கடுமையாக விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடை பிடித்து வந்த ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.
இந்த ராஜினாமாவால் இன்று பங்கு சந்தைகள் பெரும் சரிவை எதிர்கொண்டன. அதே நேரத்தில் பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனை குழுவில் இடம்பெற்றிருந்த சுர்ஜித் பல்லாவும் ராஜினாமா செய்துள்ளார்.
பொருளாதார வல்லுநர்கள் அடுத்தடுத்து மோடி அரசிடம் இருந்து தப்பி ஓடுவது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
யார் இந்த சுர்ஜித் பல்லா?
ஆக்ஸ் முதலீட்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநர். புரூட் பல்கலைக்கழகத்தில் பொறியியலும், பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தின் உட்ரோ வில்சன் கல்லூரியில் முதுகலை பட்டமும், பொருளாதாரத்தில் பிஹெச்டி பட்டமும் பெற்றவர்.
உலக வங்கியின் ஆராய்ச்சி மற்றும் கருவூல துறையில் பணியாற்றியவர். கோல்டுமேன் சாக்ஸ், டாய்ஷ் பேங்க், ராண்ட் கார்ப்பரேஷன் என பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பொருளாதார ஆராய்ச்சி தொடர்பான பல நூல்களுக்கு ஆசிரியர். அரசியல் தவிர கிரிக்கெட் மீதான ஆர்வமும் இவருக்கு உண்டு. விக்கெட்டுக்கு இடையே: யார் சிறந்தவர் ஏன்? என்பதுதான் இவரது முதல் நூல்.