என்னை எவனாலும் ஆட்டவும் அசைக்கவும் முடியாது.. மு.க. ஸ்டாலின், ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது திருநாவுக்கரசர் கடும் அட்டாக்
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து என்னை எவனாலும் ஆட்டவும் அசைக்கவும் முடியாது என திருநாவுக்கரசர் கடுமையாக விமர்சித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்காக தமிழகம் வருகிறார் சோனியா காந்தி. அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுப்பது தொடர்பாக சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார் திருநாவுக்கரசர்.
இக்கூட்டத்தில் பேசிய திருநாவுக்கரசர், எனக்கு ராகுல் காந்தி முழுமையான சுதந்திரத்தை கொடுத்திருக்கிறார். என் தலைமையில்தான் லோக்சபா தேர்தலை சந்திக்கப் போகிறோம்.
என்னை இந்த பதவியில் இருந்து தூக்கிவிட நிறையபேர் தலைகீழாக முயற்சிக்கின்றனர். ஆனால் எவனாலும் என்னை இந்த பதவியில் இருந்து நீக்கிவிட முடியாது. என்னை எவனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என காட்டமாக பொங்கியிருக்கிறார்.
சசிகலா, தினகரன், ரஜினிகாந்த் என அனைத்து தரப்புடனும் திருநாவுக்கரசர் நெருக்கமாக இருப்பதால் புதிய தலைவரை காங்கிரஸ் நியமிக்க வேண்டும் என ஸ்டாலின் தரப்பு அழுத்தம் கொடுத்து வருகிறது. அதேபோல் திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தரப்பும் முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் எவனாலும் என்னை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என திருநாவுக்கரசர் பேசியிருப்பது இந்த இருவரையும் மனதில் வைத்துதான் என்கின்றன சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள்.
-எழில் பிரதீபன்