5 மாநில சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வி... கருத்து தெரிவிக்க மறுத்து மோடி எஸ்கேப்
5 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் நிலவரப்படி, காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் முன்னிலையில் இருந்து ஆட்சியை பிடிக்க உள்ளது. பாஜக பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் இது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி எஸ்கேப் ஆகியுள்ளார்.
தெலுங்கானா, ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆளும் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அமோகமாகவுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 90 தொகுதிகளில் 63 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. 15 ஆண்டுகளாக ஆட்சியை தக்க வைத்து வந்த பாஜக தோல்வியை சந்தித்து, 15 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது.
ராஜஸ்தானிலும் மொத்தமுள்ள 199 தொகுதிகளில் 114 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. ஆளும் பாஜக 81 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் 112 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இங்கும், பாஜக 103 இடங்களில் முன்னிலை பெற்று பின்னடைவை சந்தித்துள்ளது.
தெலுங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்கிறது. மிசோரத்தில், எம்என்எப் கட்சி 27 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் காங்கிரஸ் வெறும் 9 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளதாக மிசோரத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழப்பது உறுதியாகிவிட்டது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது உறுதியாகிவிட்டது. பாஜக படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில் இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.
ஆனால், மத்தியில் உள்ள பாஜக 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பின்னடைவு சந்தித்துள்ளது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கருத்து கூற மறுப்பு தெரிவித்துள்ளார்.