கூண்டோடு காலியாகும் தினகரன் கூடாரம்- உடன்பிறப்புகளை தடாலடியாக களமிறக்கிய ஸ்டாலின்

இலை கிழிசல், பந்திக்கு ஆள் இல்லை எனப் புதிய வார்த்தைகளைப் பேசி தினகரன் கூடாரத்தைக் கழுவி ஊத்தியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். தேர்தல் நெருங்குவதால் திமுகவை நோக்கியும் அதிமுகவை நோக்கியும் இடம் தேடிக் கொண்டிருக்கிறார்கள் தினகரன் அணியினர்.

கரூரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. இந்த சண்டை ஏற்படாமல் இருந்திருந்தால், அதிமுகவிலேயே இருந்திருப்பார் செந்தில் பாலாஜி.

அதே போன்றுதான் பன்னீர்செல்வத்துக்கு எதிராகக் கருவிக் கொண்டிருக்கிறார் தங்க.தமிழ்ச்செல்வன். பாப்பிரெட்டிப் பட்டி பழனியப்பனுக்கும் அன்பழகனுக்கும் இடையே நடப்பதும் இதேபோன்ற சண்டைதான்.

இதையெல்லாம் புரிந்து கொண்ட எடப்பாடியாரும், மாவட்டங்களில் மட்டும் இந்த அக்கப்போர் இல்லாவிட்டால் அவர்கள் எல்லாம் நம்பக்கம் வந்துவிடுவார்கள்.

தகுதிநீக்க வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு தான் நம்மைத் தேடி வரத் தொடங்கியிருக்கிறார்கள். நம்மை வலுப்படுத்திக் கொள்ள இதுதான் சரியான நேரம்' எனப் பேசியிருக்கிறார். அதாவது, சசிகலா, தினகரனை ஓரம்கட்டிவிட்டு தனிப்பெரும் செல்வாக்குடைய தலைவராக மாறத் தொடங்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

கருணாஸ் போன்றவர்களை எதிர்கொள்வதற்காகத்தான் கஞ்சா கருப்பு போன்றவர்களைக் கட்சிக்குள் சேர்த்திருக்கிறார். கட்சியும் ஆட்சியும் இனி வருவதற்கு வாய்ப்பில்லை என்பதை அறிந்த பிறகே, தூது முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர் தகுதிநீக்கத்துக்கு ஆளான முன்னாள் எம்எல்ஏக்கள்.

இதில், தனக்கு வேண்டிய ஆறு முன்னாள் எம்எல்ஏக்களை அழைத்துக் கொண்டு திமுக கூடாரத்துக்குத் திரும்ப இருக்கிறாராம் செந்தில் பாலாஜி. இதற்கான பணிகளை கரூர் மாவட்டத்தைக் கோலோச்சும் திமுக புள்ளி கே.சி.பழனிசாமி செய்து வருகிறாராம்.

மணல் விவகாரத்தில் செந்திலோடு முறைத்துக் கொண்டிருந்த கேசிபி, கடந்த ஆட்சியின்போதே ராசியாகிவிட்டார்களாம். இதன்பின்னர், அதிமுகவும் திமுகவும் ரகசிய கூட்டணி வைத்துக் கொண்டு தொழில்களை நடத்தி வந்துள்ளனர்.

இதுவே செந்தில் பாலாஜி பதவி பறிப்புக்கும் ஒரு காரணமாக அமைந்துவிட்டதாக அப்போதே பேசியுள்ளனர் கரூர் மாவட்ட கட்சிக்கார்கள். இந்தப் பாசம் இன்றளவும் நீடிப்பதால்தான் சில ரகசிய வாக்குறுதிகளை அளித்திருக்கிறாராம் ஸ்டாலின்.

கொங்கு பெல்ட்டில் படுசோர்வாக திமுக இருப்பதால் செந்தில்பாலாஜி போன்ற பசையானவர்களை சேர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டியிருக்கிறார் ஸ்டாலின். 'இன்னும் எத்தனை பேர் வருவார்கள், இணைப்பு விழாவை மாநாடு போல நடத்தலாமா?' என்றெல்லாம் தினகரனைக் கதிகலங்க வைத்திருக்கிறார் இந்த முன்னாள் மாண்புமிகு.

-அருள் திலீபன்

More News >>