சட்டசபையில் பேச அனுமதிக்காத தனபால் - வெளிநடப்பு செய்த டிடிவி தினகரன்

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேச அனுமதி அளிக்கப்படாததால் ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் தமிழக சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் ஆளும் கட்சி, எதிர்க் கட்சியான திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் கடந்த இரண்டு நாட்களாக விவாதத்தில் பங்கேற்று பேசினர்.

மூன்றாம் நாளான நேற்று வியாழக்கிழமை (ஜனவரி 11) முன்வரிசை தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசுவதற்கு ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற சுயேட்சை உறுப்பினர் டி.டி.வி. தினகரன் வாய்ப்பு கேட்டிருந்தார்.

வாய்ப்பு கொடுப்பதாக புதன்கிழமை உறுதி கொடுத்த பேரவைத் தலைவர் வியாழக்கிழமை மறுத்தார். இதற்கு தினகரன் எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது கூறிய பேரவைத் தலைவர் தனபால், “விவாதத்தில் பேச அரசியல் கட்சித் தலைவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது என்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனால், தங்களுக்கு வாய்ப்பு தர முடியவில்லை. உங்களை பேச அனுமதிக்கக்கூடாது என்ற எண்ணம் எனக்கு இல்லை. நிறைய வாய்ப்புகள் உள்ளது வேறு சந்தர்ப்பத்தில் நிச்சயம் அனுமதிக்கிறேன் என்று தெரிவித்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தினகரன் பேரவையிலிருந்து வெளி நடப்பு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் 57,000 பேருக்கு வீடு கட்டித்தருவது தொடர்பாக பேச இருந்தேன். மீன் அங்காடியை தரம் உயர்த்துதல், குடிநீர் பிரச்சனை உள்ளிட்டவை தொடர் பாகவும் பேச இருந்தேன். உணவு இடைவேளை சமயத்தில் பேச வாய்ப்பு தருவதாக பேரவைத் தலைவர் கூறியிருந்தார். ஆனால் எனக்கு பேச வாய்ப்பு தரவில்லை. இதை கண்டித்து வெளிநடப்பு செய்தேன்” என்றார்.

More News >>