பூ என்றும் சொல்லலாம் புய்ப்பம் என்றும் சொல்லலாம்: தேர்தல் முடிவு குறித்த தமிழிசையின் மழுப்பல் பதில்
5 மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது குறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மழுப்பும் விதமாக பதிலை தெரிவித்துள்ளார்.
5 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் நிலவரப்படி, காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் முன்னிலையில் இருந்து ஆட்சியை பிடிக்க உள்ளது. தெலுங்கானா, ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆளும் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உறுதியாகி உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: பாஜகவிற்கு பின்னடைவு என்று சொல்ல மாட்டேன். காங்கிரஸிற்கு முன்னேற்றம் என்றும் சொல்ல மாட்டேன். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜகவிற்கும், காங்கிரசிற்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் நெருக்கமாகவே இருக்கிறது.
முன்னிலை என்பது பக்கத்துக்கு பக்கம் இருப்பதால் பாஜகவிற்கு இது ஒரு வெற்றிகரமான தோல்வி என்று தான் கூற வேண்டும். தோல்வியிலேயே இரண்டு வகைகள் உண்டு. தோல்வியில் படுதோல்வி என்று இருக்கிறது, மோசமான தோல்வி என்று இருக்கிறது, சுமாரான தோல்வி என்றும் இருக்கிறது. வெற்றிக்கு அருகில் வந்து தோற்று போவதுபோல தான் தற்போது பாஜகவின் நிலை உள்ளது. காங்கிரசுக்கு இணையாக ஓடி வந்ததே பாஜகவின் வெற்றியின் அடையாளம் தான்.இவ்வாறு தமிழிசை கூறினார்.