டெல்லி அரசியலில் சபரீசன்... குழிபறிக்க காத்திருக்கும் கடுகடு மாறன் சகோதரர்கள்
டெல்லிக்கு ஸ்டாலின் மனசாட்சியாக சபரீசன் வருவதை உற்றுக் கவனிக்கின்றனர் மாறன் சகோதரர்கள். ஆ.ராசாவுக்கு குழி தோண்டியது போல, சபரீசனுக்கும் தோண்டுவதற்கு அவர்கள் தயாராகி வருவதாக சோர்ஸுகள் தெரிவிக்கின்றன.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் தொண்டர்களுக்கு மனதளவில் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. பாராளுமன்றத் தேர்தலை சோர்வில்லாமல் எதிர்கொள்ள இந்த வெற்றி உதவும் என ராகுலைப் போலவே ஸ்டாலினும் நம்புகிறார்.
கடந்த வார இறுதியில் டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் நடந்த மீட்டிங்கில், சபரீசனை டெல்லி வாலாக்களுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் ஸ்டாலின். இதனை வேண்டா வெறுப்பாக டி.ஆர்.பாலுவும் ராசாவும் பார்த்தாலும் அவர்கள் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை.
தளபதியின் விருப்பம். நாம் எதாவது பேசப் போய் வம்பாகிவிடும் என ஒதுங்கிக் கொண்டனர். இரண்டு நாள்கள் நீடித்த சுற்றுப்பயணத்தில் டெல்லி, மிண்டோ பிரிட்ஜ் பகுதியில் சபரீசனுக்காகத் தயாராகி வரும் கட்சி அலுவலகத்தையும் பார்வையிட்டிருக்கிறார்கள்.
இந்த அலுவலகத்தில் இருந்துதான் சபரீசன் அரசியல் அஸ்திவாரத்தை பலப்படுத்த இருக்கிறாராம். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தோற்ற கையோடு தொழிலை மட்டும் கவனித்து வருகிறார் தயாநிதி மாறன்.
தகவல் தொழில்நுட்பத்துறை , ஜவுளித்துறை என அதிகாரத்தின் அனைத்து பக்கங்களிலும் ருசி கண்டவர் அவர்.
டெல்லிக்குக் கனிமொழியைக் கூட்டிச் சென்ற ஸ்டாலின், மாறன் சகோதரர்களுக்கு கல்தா கொடுத்துவிட்டார்.
அவர்களைப் பக்கத்தில் வைத்துக் கொண்டால் ஆபத்து என அவர் கருதுவதை அறிந்த இந்த பிரதர்களும் சர்கார், பேட்ட என விஜய், ரஜினியை முன்னிறுத்தி அரசியல் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். சர்கார் இசை வெளியீட்டு விழாவிலும், முதல்வர் பதவியில் நடிக்க மாட்டேன் என விஜய் கூறியதை வெகுவாக ரசித்தார் கலாநிதி மாறன்.
இந்த விழா, ஸ்டாலின் மனதில் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இதன்பின்னர் சபரீசனைக் கை பிடித்து அழைத்துப் போய் ராகுலிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்த சந்திப்பை ஆத்திரத்துடன் கவனித்தாராம் தயாநிதி. 'மருமகன் தவறு செய்யட்டும். அப்போது பார்த்துக்கலாம்' எனக் காத்திருக்கிறார்களாம் கருணாநிதி மனசாட்சியின் பிள்ளைகள்.
- அருள் திலீபன்